திருநெல்வேலியில் ஏழை ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட அன்புச்சுவர் திட்டத்தை பொலிவுடன் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி அன்புச்சுவர் திட்டத்தை துவக்கி வைத்தார். அதில் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை இதற்கெனவே அமைக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து சேர்த்தால் அவற்றை இல்லாதோர் எடுத்து பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.




இதற்கென்று திருநெல்வேலி ஆட்சியரகம் நுழைவாயில அருகே பயன்படுத்திய ஆடைகள் பொருட்களை கொண்டு வைக்க தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு கூரைவையப்பட்டு இரும்பு கூண்டுகள் மூலம் அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் அங்கு கொண்டு வந்து போடப்படும் ஆடைகள் காலணிகள் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை ஏழை எளியவர்கள் ஆர்வமாக எடுத்துச் சென்றனர், இதை முறைப்படுத்தி கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.




திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டத்தை தொடர்ந்து அன்புச்சுவர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் பொறுப்பேற்று கொண்ட திருநெல்வேலி ஆட்சித்தலைவர்கள் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அக்கறை செலுத்தவில்லை.இதனால் பெயரளவில் மட்டும் இத்திட்டம் தற்போதும் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இதில் பொருட்கள் கிடைக்கிறதா பொம்மைகள் உள்ளதா என்று வரும் ஏழைகளுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.




மேலும் இங்கே கொண்டு வந்து போடப்படும் பழைய துணிகளை சிலர் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று பழைய துணிக்கடைகளில் விற்றும் வருகின்றனர். ஏழைகள் ஒரு வேலை இதில் போடப்பட்ட துணிகளை எடுக்க வந்தால் அவர்களை மிரட்டி அனுப்பும் அடாவடியிலும் ஈடுபடுகின்றதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது மக்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்களை அன்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கொண்டு வந்து வைப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கொண்டு வந்து வைக்கப்படும் துணிமணிகளை ஏழைகள் இல்லாதோர் எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலியில் துவங்கப்பட்ட முன்மாதிரி திட்டமான அன்புச்சுவர் திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் ஆக்கபூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர். மூட்டை மூட்டையாக கட்டி சென்று பழைய துணிகளுக்கு விற்பனை செய்யும் கும்பலை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறும் இவர்கள் அன்புச்சுவர் திட்டத்தை  மக்கள் அதிகம் கூடும் பகுதியில் அமைத்து விரிவு படுத்த வேண்டும் என்கின்றனர்.