விளையாட்டு மைதானத்திற்காக அரசு வழங்கிய நிலத்தில் 3 ஏக்கரை தனியாருக்கு விற்ற விவகாரம்- மீட்க போராடும் எட்டயபுரம் மக்கள்- மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு




காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என பாடிய பாரதியாரின் பிறந்த ஊர் எட்டயபுரம். இங்கு அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி,  எட்டயபுரம்  ஜமீனால் கடந்த 1895-ல் தொடங்கப்பட்டது. இந்தப்பள்ளியில் முண்டாசு கவிஞன் பாரதியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் பயின்று உள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே ஜமீனின் சொந்த செலவில், அரண்மனையில் உணவு தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பாரம்பர்யமான ராஜா மேல்நிலைப்பள்ளியின் மைதான நிலம் விற்பனை செய்யப்பட்டது, பள்ளியின் பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ள ராஜா மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவரும், சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவரின் 6வது வாரிசுமான காஜா மைதீனிடம் கேட்டபோது, “எட்டயபுரத்தைச் சுற்றியுள்ள 40 கிராமங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள்.  கடந்த 1966-ம் ஆண்டு முதல் இப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியானது. பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு மைதானம் வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் பள்ளிக்கு அருகில் இருந்த 5.03 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பள்ளி மாணவர்களின் விளையாட்டு மைதானத்திற்காக அளித்ததோடு மட்டுமல்லாமல் அதை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்து இருந்தது. எட்டயபுரம் தாலுகா பதிவேடுகளில் இந்த நிலம், அரசுப் புறம்போக்கு நிலம் என்றே தற்போது வரையிலும் உள்ளது.




ஆனால், தற்போது பள்ளியின் செயலரான ராம்குமார் ராஜா, இதில் 3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சிலருக்கு விற்பனை செய்திருக்கிறார். இது தொடர்பான விபரங்கள் கிடைத்தவுடன் போராடினோம் எந்தப்பயனும் இல்லை. சார் பதிவாளர் போலி ஆவணங்களை அடிப்படையாக வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளார் என மாவட்ட பதிவாளரே எங்களுக்கு அறிக்கையாக கொடுத்துள்ளார். இது அரசு புறம்போக்கு நிலம்தான் என்பதற்கும், போலியாக விற்கப்பட்டது என்பதற்கும் எங்களிடம் போதிய ஆவணங்கள் உள்ளன. நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இந்த வழக்கில் உரிய விளக்கம் அளித்திட பள்ளிகல்வித்துறை செயலர், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்றத்தை நம்புகிறோம், மோசடியாக விற்கப்பட்ட நிலத்தை மீட்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.





மேல்நிலைப்பள்ளியின் செயலரான ராம்குமார் ராஜாவிடம் கேட்டபோது, “அது எனது தந்தையாரின் பூர்விக நிலம். அவரின் வாரிசு என்ற முறையில், பள்ளியின் வளர்ச்சிக்காக அரசின் அனுமதி பெற்றே அந்த நிலம் விற்கப்பட்டது. மற்ற விவரங்களை நீதிமன்றத்தில் கூறிக்கொள்கிறேன்” என்கிறார்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, ராஜா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கடந்த 1966இல் பள்ளிக்கு அருகில் இருந்த இந்த 5.03 ஏக்கர் இடத்தை பள்ளி நிர்வாகத்திற்கு அளித்தது. அதில் இந்த நிலத்தை விளையாட்டு மைதானத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், விற்பனை செய்யக்கூடாது எனவும் தான் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்திற்கான பட்டாவிலும் விளையாட்டு மைதானம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது. அதை மறைத்து 3 ஏக்கர் நிலத்தை பள்ளி செயலாளர் விற்பனை செய்து உள்ளார். முறைகேடான விற்பனை செய்யப்பட்ட பதிவை ரத்து செய்யவும் நிலத்தை சீரமைத்து விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளதாக தெரிவித்த ஆட்சியர், நீதிமன்றத்திலும் இந்த கருத்து முன்வைக்கப்படும் என்றார்.