நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த மின் உற்பத்தி செய்யக்கூடிய பல்வேறு சாதனங்களின் பயன்பாட்டிற்காக ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். நேற்று பாண்டிச்சேரியில் இருந்து கூடங்குளத்திற்கு 185 ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியானது இன்று நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் முன்பு விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த சிலிண்டர்கள் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சிதறின. பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிக்கு சென்றனர். ஆனால் ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கும் குணம் உள்ளதினாலும், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டால் எந்த விதமான வாசனை ஏற்படாது என்பதினாலும் சிதறிய சிலிண்டர்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை தீயணைப்புத் துறையினரால் அறிய முடியவில்லை.




எனவே இதுபற்றி தகவல் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.   அங்குள்ள வேதியியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுனர்களும், தீயணைப்புத்துறை வல்லுநர்களும் சம்பவ இடத்திற்கு ஹைட்ரஜன் வாயு கசிவை அறியும் உபகரணங்களுடன் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹைட்ரஜன் சிலிண்டரில் வெப்பத்தினால் வாயு கசிவு ஏற்படாத வண்ணம் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் அதனை குளிர்விக்கும் வண்ணம் தண்ணீரை பீச்சி அடித்து விபத்து ஏற்படாதவாறு தடுத்தனர். இதனால் நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து அணுகு சாலை வழியாக மாற்றப்பட்டது. நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழி சாலை மூடப்பட்டு கன்னியாகுமரி நெல்லை நான்கு வழி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. விபத்து பகுதியில் யாரும் நெருங்காத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அணுமின் நிலைய வல்லுநர்களின் ஆய்வுக்கு பிறகு சிலிண்டர்கள் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் கூடங்குளம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் லாரி முன்பக்க டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுனர் ராஜன் தெரிவித்துள்ளார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண