தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு தொழில், போதுமான தொழிலாளிகள் இல்லாதது, துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி போன்றவற்றால் குறைந்து வருகிறது.
உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு கூடையுடன் தலையில் சுமந்து உப்பு அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது. குடும்ப சூழல், பொருளாதார நிலை உள்ளிட்டவைகளால் இப்பணிகளை செய்து வந்தாலும் கூட மழை காலம் வந்தால் அதிலும் மண் விழுந்து மூன்று மாத காலம் வேலை இழப்பு என கண்ணீரில் கரைகின்றனர் தொழிலாளிகள்.
உப்பள தொழில் பெரும்பாலும் வெயில் காலங்களில் மட்டுமே நடைபெறும் நிலையுள்ளது. மழை காலங்களில் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கிவிடுவதால் உப்பு உற்பத்தி சுமார் 3 முதல் 4 மாத காலம் நடைபெறுவதில்லை. இந்த மழை காலங்களில் உப்பளத்தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் உப்பள தொழிலாளிகளுக்கு மழை கால நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த காலங்களில் உப்பள தொழிலாளிகளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்காமல் ஏமாற்றியது அதிமுக அரசு என்கின்றனர் உப்பள தொழிலாளிகள். அதே போன்று தற்போதைய தேர்தலின் போது திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் தொடர்பாக ஏபிபி நாடு தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தது.
இந்த தொழிலாளர்கள் மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். இதனால் தொழில் பாதிக்கப்படும் மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மழைக்கால நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் உப்பள தொழிலாளர்களுக்கு பணி இல்லாத காலங்களில் மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 8 ஆயிரத்து 465 உப்பள தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு உப்பள தொழில் நடைபெறாத மழைக்காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடியே 23 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான மழைக்கால நிவாரண உதவி வழங்கப்பட இருப்பதால் உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு அரசின் மழைக்கால நிவாரணத் தொகை குறித்தான அறிவிப்பானை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் உப்பளத் தொழிலாளர்கள், ஏபிபி நாடுக்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர். தங்களுக்கென தமிழக அரசு தனியான நல வாரியம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்