நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதநகரை சேர்ந்தவர் சதீஷ் வயது 17. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சதீஷின் தந்தை ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை சதீஷ் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக தனது தாயிடம் தெரிவித்து விட்டு வெளியே சென்று உள்ளார்.




இதற்கிடையில் மருதநகர் ரயில்வே கேட் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒரு சிறுவன் உடல் கால் கைகள் தனியாக துண்டான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் அது ஜெகதீஷின் மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு சடலத்தை  மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மாணவர் சதீஷ் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.  முதல்கட்ட விசாரணையில் மாணவன் சதீஷ் செல்போனுக்கு அடிமையாகி இருந்ததாகவும், இதனால் பெற்றோர் செல்போன் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று பள்ளி செல்வதாக கூறி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இருப்பினும் சதீஷிற்கு  பள்ளியில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? அல்லது வீட்டில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவிகள்  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெற்றோர்களிடையே பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060