நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்.  இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.  இந்த  நிகழ்விற்காக பலர் ஒரு வாரத்திற்கு முன்பே குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து கோவில் திருவிழா முடிந்தவுடன் வீடுகளுக்கு செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று காலை மதுரையில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக உறவினர்களான சரவணன் மற்றும் விஷ்ணுகுமார் ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தனர். அப்போது சரவணனின் மகன் கார்த்திக் மற்றும் விஷ்ணு குமாரின் மகன் ஹரிஸ் குமார் ஆகியோர் கோவிலுக்கு அருகே வழிந்தோடும் தாமிரபரணி ஆற்றில் இறங்கி உள்ளனர். அப்போது கால் தவறிய நிலையில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கி உள்ளனர்.




சிறுவர்களை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய நிலையில் சுற்றி இருந்தவர்கள் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உள்ளனர். ஆனால் மீட்கும் போதே சிறுவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. குறிப்பாக ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். ஆற்றில் ஆழம் தெரியாமல் மக்கள் யாரும் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம்,  இது அபாயகரமான பகுதி என ஒரு சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதனையும் மீறி உயிரிழப்புகள்  நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது.




இது போன்ற திருவிழா காலங்களில் காவல் துறையினர், மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவ வசதி போன்றவைகளை முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைப்பதன் மூலம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஒட்டி நேற்று ஒரே நாளில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண