கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி ஆமை), அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும். அதன்படி தற்போது ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.




மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில் குறிப்பாக மணப்பாடு, பெரியதாழை கடற்கரையிலும், புன்னக்காயல் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதியிலும், கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலும், மூக்கையூர், சேதுக்கரை, முந்தல் பகுதியிலும் ஆமைகள் முட்டையிட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக கடற்கரையோர பயன்பாடு அதிகரித்ததால் ஆமைகள் கரைக்கு வருவது குறைவாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு இந்த ஆண்டு ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு வருகின்றன. அதனை வனத்துறையினர் சேகரித்து அதற்கென வைத்து உள்ள பிரத்யேக பொரிப்பகத்தில் வைத்து பொரிக்க செய்து கடலில் விட்டு வருகின்றனர்.




இதுகுறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரக அலுவலர்கள் கூறும் போது, “மன்னார் வளைகுடா பகுதியில் 5 வகையான ஆமைகள் உள்ளன. இந்த ஆண்டு ஆமைகள் அதிக அளவில் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு வருகின்றன. சிற்றாமைகள் கூட்டமாக கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம். இந்த ஆமைகள் முட்டையிடுவதை வைத்துதான் முட்டையிடும் காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற ஆமைகள் கரைக்கு வருவதை கண்டுபிடிப்பதே சிரமம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.




இந்த ஆண்டு தூத்துக்குடி சரகத்தில் கடந்த 3 மாதத்தில் சுமார் 4 ஆயிரம் முட்டைகளும், திருச்செந்தூர் சரகத்தில் சுமார் 1000 முட்டைகளும் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த முட்டைகள் அதற்கான பிரத்யேக பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விடப்படுகிறது. ஆமைகள் முட்டையிடும் காலத்தில், அந்த முட்டைகளை பாதுகாப்பாக சேகரிப்பதற்காக பிரத்யேகமாக ஆமை பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தினமும் அதிகாலை நேரங்களில் கடற்கரையோரங்களில் ரோந்து சென்று ஆமை முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்துக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆமைகளின் வரத்து அதிகரித்து உள்ளது” என்றனர்.