கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரம் நீண்ட காலம் வாழும் குணம் கொண்டது சுமார் 30 மீட்டர் வரை உயர்ந்து வளரும் பனைமரம் உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடிய ஒன்று. இந்தியாவில் எட்டரை கோடி பனை மரங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டுமே ஐந்து கோடி பனை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
பனை மரத்திலிருந்து 90 வகையான உப பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய பயன்களைக் கொண்ட பணிகள் கடும் வறட்சி காரணமாகும் அதிக காற்று காரணமாகவும் அழிந்து வந்தன. மக்களின் பல்வேறு தேவைகளுக்காக மரங்களை வெட்டியதாலும் அழியத் துவங்கியது. இதனை நம்பி பனை மரங்களை வாழ்வாதாரமாகக் கொண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பனை மரங்கள் வேகமாக அழியும் சூழலை கண்ட தமிழக அரசு பனை மரங்கள் வெட்ட தடை விதித்தது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக நீர்நிலைகள் குளங்கள் கண்மாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்களை வளர்க்கும் வகையில் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பனை மரங்கள் பரவலாக உள்ளன. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பனை மரங்கள் உள்ளன. மாநிலத்தின் மொத்த பனை மரங்களின் எண்ணிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் பனை மரங்களும், நெல்லை மாவட்டத்தில் 40 லட்சம் பனை மரங்களும் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி ராதாபுரம், பாளையங்கோட்டை, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர்கள் சுமார் 20,000 மேற்பட்டோர் இருந்தனர் தற்போது பனைத் தொழிலை கைவிட்டு வாழ்வாதாரத்தை தேடி சென்னை, மும்பை,கோவை போன்ற நகரங்களுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். பனைத் தொழில் ஆண்டுக்கு 5 மாதங்கள் மட்டுமே இருக்கும், அதிலும் குறிப்பாக இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே மிகவும் சிறப்பாக இருக்கும் இதன் காரணமாகவும் பனைத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மாற்றத் தொடங்கினர். இதுவே அதிக அளவு பனைத் தொழிலாளர்கள் பனைத் தொழிலை விட்டு செல்வதற்கும் காரணமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை வறண்ட பகுதியான உடன்குடியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிக்கு தனி மவுசு உண்டு, இங்குள்ள தேரி மணலில் பனை மரங்களில் இருந்து கிடைக்கப்படும் பதனி தனி சுவை கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குலசேகரன் பட்டினத்தில் பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்டது, அந்த ஆலைக்கு பதநீர் பெறுவதற்காகவே திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டினம் வழியாக திசையன்விளை வரை தனி ரயில் அமைக்கப்பட்டது, அந்த அளவு உடன்குடி பதிநீருக்கும் தனிச்சிறப்பு உண்டு.
தற்போது உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலானவர்கள் பனங்காடுகளிலும் தோட்டங்களிலும் குடும்பமாகவே பனை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் ஆண்கள் பனை மரங்களில் ஏறி பதநீர் எடுத்து வந்தவுடன் பெண்கள் விறகு அடுப்பில் பதனை நன்கு காய்ச்சி சுவையான கருப்பட்டி தயாரிக்கின்றனர். உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. அதே நேரத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். உலகப் பொருளாதார மயமாக்களுக்கு மாற்றாக தமிழர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். பன்னாட்டு குளிர்பானங்களுக்கும் மாற்றாக எண்ணற்ற நன்மைகளை தரும் இயற்கை பானமான பதநீர் மற்றும் நுங்கு பணங்கோல் போன்றவற்றின் விற்பனையை அதிகரித்து சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பனை தொழிலாளர்கள்.