மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி அருகே சாத்தூரப்பன் நாயக்கன்பட்டியிலிருந்து 5.5 மீட்டர் அகலத்திற்கு சணல் பாய் விரித்து அதன் மீது ஜல்லி கலவையை கொட்டி தார் சாலை அமைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் எவ்வித சேதமும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சாலைகள் அமைக்க வட்டார ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் நிதி மற்றும் பணிக்கான நிர்வாக அலுவலர் அனுப்பி கோரி வைக்கப்படுகிறது.இப்பணியை செய்ய பரிந்துரைக்கும் முன் பாலம், மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர் வடிகால் வசதி ஆகயவை எத்தனை இடங்களில் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டு ஜி.பி.ஆர்.எஸ் அட்சரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும்.இப்பணிக்கு நிதி மற்றும் நிர்வாக அனுமதி வழங்கிய பிறகு சிறிய மாற்றம் கூட செய்ய முடியாது,பணிகள் அனைத்தையும் மத்திய அரசின் கிராம சாலை திட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அமைக்கப்படும் சாலையை 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பும் செய்து தர வேண்டும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டப் பணிகள் மிகவும் தரமானதாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டது அதை பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. கரிசல் மண் தன்மை உடைய நிலப்பரப்பு வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் சேதம் அடைந்து வந்தன. இது போன்ற இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் மாற்று திட்டமாக புதிதாக சாலை அமைக்கும் போது ஓவ்வொரு அடுக்கிலும் ஒட்டுப்பசை கலந்து முதலில் ஒன்றரை இன்ச் உயரத்துக்கு ஜல்லிக்கலவை விரித்து அதன்மீது முக்கால் இன்ச் கனத்துக்கு ஜல்லி கலவையை கொட்டி அதன்மீது பாலீதின் பாய் விரித்து இதற்கு மேல் ஜல்லிக்கலவை விரித்து தார்சாலை அமைத்து வந்தனர். ஆனாலும் இது போதிய பலனை கொடுக்கவில்லை.
தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்துடன் தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தூரப்ப நாயக்கன் பட்டியில் இருந்து மலைப்பட்டி வரை செல்லும் 2.4 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது ஒன்றரை,முக்கால்,அரை இன்ச் கனத்துக்கு ஜல்லிக்கற்கள் விரித்து மூன்று அடுக்கில் தரமாக அமைக்கப்படுகிறது.இச்சாலை செல்லும் பகுதி கரிசல் நிறைந்தது என்பதால் மழைக்காலங்களில் எளிதாக ஈரப்பதம் கூத்து சேதமடையாமல் இருக்க 5.3 மீட்டர் அகலத்துக்கு 2.04 கிலோமீட்டர் தூரம் வரை சணல் பாய் விரித்து அதன் மீது தார் சாலை அமைக்கின்றனர்.இதனால் மழைக்காலங்களில் பக்கவாட்டில் ஈரப்பதம் காரணமாக எவ்வித சேதமும் அடையாது எனக் கூறுகின்றனர் அதிகாரிகள்.இதே போல் வரும் காலத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டு சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.