நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நீதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பணிநீக்கப்பட்ட ஏ.எஸ்.பி.:
இந்த விவகாரம் தொடர்பாக ஏஎஸ்பி பணியிட நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், தனி பிரிவு உதவி ஆய்வாளர், உளவு பிரிவு காவலர்கள், தனி பிரிவு காவலர்கள் என எட்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.. விசாரணை அதிகாரியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளருமான அமுதா நியமனம் செய்யப்பட்டார். அதன்படி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்த அவர் வண்ணாரபேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார். அங்கு அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையும், உயர்நிலை விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளார்.
நாளை விசாரணை:
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இந்த விவாகரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 4:00 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் தமது விசாரணையை தொடங்க உள்ளார். பற்கள் பிடிங்கியது சம்பந்தமாக புகார்கள் அளிக்க விரும்புபவர்கள் ஆவணங்கள், தகவல்கள், அல்லது வாக்குமூலங்கள் அளிக்க விரும்புவோர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கலாம்.
ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் வாக்குமூலம் அளிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினால் அவர்களும் நேரில் வரலாம். பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்திக்கலாம். அல்லது மின்னஞ்சல் ambai.inquiry@gmail.com மூலமாகவோ தொலைபேசி whatsapp 918248887233 எண்ணிலோ புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.