தாய்வழிச் சமூகமும் பண்பாடும் என்ற தலைப்பில் அவர் சார்ந்த நன்குடி வேளாளர் சமூகத்தில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் குறித்து சிவகளையைச் சேர்ந்த முத்தம்மா சேரந்தையனிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, முடிவைத்தானேந்தல், புதூர், பொட்டலூரணி, செக்காரக்குடி, தளவாய்புரம், கூட்டுடன்காடு, கொற்கை, செட்டியூரணி, வரத்தகரெட்டிபட்டி, பணகுளம், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திரபுரம், பாண்டியபுரம், தட்டப்பாறை, ஏரல் ஆகிய 16 ஊர்களில்தான் நன்குடி வேளாளர் சமூக மக்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 16 ஊர்களைச் சேர்ந்த மக்களின் பழக்க வழக்கங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் ஒரே மாதிரியானவைதான். நன்குடி வேளாளர் சமூகத்தினரை சிவகளைப் பிள்ளைமார் எனவும் அழைக்கிறார்கள்.




ஒரு வீட்டில் குலவைச் சத்தம் கேட்கிறது என்றால் அந்த வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையை தொட்டிலில் போடும் போடு குலவைச் சத்தம் எழுப்புவோம். உரத்த குலவைச் சத்தமாக இருந்தால் அங்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம். அதற்காக ஆண் குழந்தையை விரும்பவில்லை என அர்த்தம் கிடையாது. பெண் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள் என்பதாலோ என்னவோ பெண் பிள்ளைகள் மீது பிரியம் சற்று அதிகம். எங்கள் சமூகத்திற்கென்று தென்னவன் கிளை, கேளரன்கிளை, திருவெம்புகிளை, திருமால்கிளை, கன்றெறிந்தான் கிளை, நாராயணன்கிளை, காங்கேயன் கிளை, காளியார்கிளை என 8 பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அதே பிரிவைச் சேர்ந்தவர்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்வதில்லை. மாற்றுக் கிளையைச் சேர்ந்தவர்களுடன்தான் மகனுக்கோ, மகளுக்கோ மணம் முடிப்போம்.




முன்பெல்லாம் மற்ற சமூகத்தவர் போல மணமகளை மணமகன் வீட்டிற்கு அனுப்பும் வழக்கமும் இருந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தினால் கணவன், மனைவி இடையே சண்டை எழ, இது என் வீடு வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறியதுடன், நான் கட்டிய தாலியைக் கொடு என மாங்கல்யத்தையும் பறித்துக் கொண்டானாம் கணவன். அதன் பிறகே பெண்ணிற்கு சீர்வரிசையுடன் சொந்தவீடு கொடுக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது.




திருமணத்தின்போது திருமாங்கல்யமும் முகூர்த்தப்பட்டும் பெண் வீட்டாரே வாங்கிக் கொள்வர். பரிசப்பட்டு என்றழைக்கப்படும் நிச்சயதார்த்த பட்டை மட்டும் மாப்பிளை வீட்டார் வாங்கிவருவர். பொன் உருக்குதல் நிகழ்ச்சியும், முகூர்த்தகால் நட்டுதலும் பெண் வீட்டிலேயே நடக்கும். பெண் வீட்டாரே மாப்பிளை கேட்டுச் செல்வார்கள். திருமண நாளன்று மாப்பிளையை இன்றும் யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவோம். இங்கு எல்லா விசயங்களிலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு. நமது அரசாங்கம் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சட்டம் இயற்றுவதற்கெல்லாம் முன்பே பல நூற்றாண்டாக நன்செய், புன்செய், வீடு போன்றவற்றில் எங்க சமூக பெண்களுக்கு சம பங்காக வழங்கப்பட்டு வருகிறது.ஊர்களில் கோயில்களின் திருவிழாக்களின் போது வசூலிக்கப்படும்,கோவில்வரியும் அந்தந்த வீட்டில் வசிக்கும் பெண்களின் பெயரிலேயே வசூலிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.




சிவகளை கிராமத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது,மற்ற சமூகத்தில் மாப்பிளை வீட்டாருக்கு நகையுடன் ரொக்கப்பணம் கொடுப்பதைப் போல எங்களது சமூகத்திலும் ரொகப்பணம் கொடுப்பார்கள். ஆனால், அந்த ரொக்கப்பணத்தை மாப்பிளை வீட்டாரிடம் நேரடியாகக் கொடுக்காமல் பெண்ணின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து டெபாசிட் செய்த சான்றிதழைத்தான் கொடுப்பார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அந்த பணத்தை பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த நேரத்திலும் தன் மகள் கடன் வாங்கி கஷ்டப்படக்கூடாது என்பதுதான் இந்த டெப்பாசிட்டின் நோக்கம். எல்லா வகையிலும் ஆண் பிள்ளையை விட பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த வரமாக நினைக்கிறோம் என்கின்றனர்.