நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "உயர் மட்ட குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி வரும் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை அறிவிப்போம்.




பிரதமர் மோடி பெயரும் இந்தியாவின் பெயரும் உலக நாடுகளுக்கு மத்தியில் எப்படி உயர்ந்து உள்ளது என்பதை தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். பாஜகவுடன் இணைந்து பயணிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றால் இறைவன் நினைப்பது நடக்கும். மோடி நம் நாட்டின் தலைவர் என்பதை பார்க்க வேண்டும் மோடி ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்பதை மட்டும் நினைக்க கூடாது. இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளதற்காக அவர் பெயரை சுட்டிக்காட்டி பேசி உள்ளேன். தென் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் அது நெல்லை மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகவும் இருக்கலாம். எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் அதற்காகத்தான் சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.




தொகுதியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். சென்னையில் பொதுமக்கள் நிவாரணம் வழங்கிய பிறகு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் அதற்கு முன்பு சோகமாக தான் இருந்தனர். சென்னையில் நடந்த இயற்கை சீற்றம் மிகப்பெரிய அளவில் நடந்ததாக அரசு சொல்கிறது. 56 ஆண்டுகளாக இதைத்தான் நாம் சொல்கிறோம் வருமுன் காப்போம் திட்டம் என பல திட்டங்களை இரண்டு திராவிட கட்சிகளும் வகுத்துள்ளது. இலவசங்களை தவிர்த்து அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு பல கோடி செலவு செய்து பாதிப்பு ஏற்படாதவாறு சீர் செய்திருக்கலாம். சதுப்பு நிலங்களில் 5000 ஏக்கருக்கு மேல் பட்டா போட்டு கொடுத்து வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். சதுப்பு நிலங்கள், நீர்வழித்தடங்கள், வடிகால் உள்ளிட்டவைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த பிரச்சனையில் அரசை மட்டும் குறை சொல்லவில்லை பொதுமக்களும் இதில் குற்றம் செய்தவர்கள். ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை பொதுமக்கள் திருப்பி கொடுத்தால் தான் நீர் வழித்தடங்கள் சிறப்பாக இருக்கும். சென்னை மக்கள் அடிப்படை வசதிகள் பலத்தையும் இழந்துவிட்டனர்.




அரசு நிவாரணம் மக்களுக்கு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. வருங்கால தொலைநோக்கு திட்டத்தை அடுத்த தலைமுறைக்காக சிந்தித்து இப்போது செயல்படுத்தினால் தான் நன்றாக இருக்கும்.சென்னை மழை வெள்ள பாதிப்பில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளத்தின் தகவல்களை வைத்து இனிமேல் வரும் காலங்களில் தவறு நடந்திருக்காமல் இருக்க நான் முதலமைச்சராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். சென்னை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு செய்த திட்டத்தை மீண்டும் ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் ஒன்பதாண்டு ஆட்சி சிறப்பாக உள்ளதால் தான் நடந்து முடிந்த தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. மது கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும் டாஸ்மாக் கடைகளை வெள்ளத்திலும் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.




2026 ஆம் ஆண்டு நான் தான் முதலமைச்சர் வேட்பாளர். நான் முதலமைச்சரானால் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். முதலமைச்சராக பதவியேற்று ஒரு வருட காலம் மக்களுக்கு தேவையான என்னென்ன திட்டங்களை செய்யலாம் என்பதையே ஆய்வு மேற்கொள்வேன். அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன். எதையும் மக்களுக்காக ஒரு ஆண்டுக்கு பிறகு செய்யவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்து சென்று விடுவேன்” எனத் தெரிவித்தார்.