தூத்துக்குடி, விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 240 விசைப்படகுகள் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மீன்பிடித் தொழிலில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவிகிதம், தொழிலாளர்களுக்கு 39 சதவிகிதம் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், கூடுதலாக வட்ட தொகை என்ற பெயரில் உரிமையாளர்கள் ஒவ்வொரு படகிலும் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பணத்தில், பிடித்தம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு வட்டப் பணம் என்ற பெயரில் அதிக அளவு பணம் வசூல் செய்யப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக விசைப்படகு மீன்பிடித் தொழிலாளர்கள் கூறுகிறார்கள். 6 சதவிகிதம் மட்டுமே வட்டப் பணம் பிடிக்க வேண்டும். வாரத்தில் 6 நாள்களும் மீன்பிடித் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் தலையிட்டு விசைப்படகு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டுமென 10 நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினரிடையே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை கடலுக்குச் செல்வதில்லை என்று முடிவெடுத்து, கடந்த 5 நாள்களாக கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தூத்துக்குடி சார் ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் சமாதானக்கூட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விசைப்படகு தொழிலாளர்களின் கோரிக்கைகள், உரிமையாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் குறித்துப் பேசப்பட்டது.
சார் ஆட்சியர் தலைமையில் உடன்பாடு கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினருக்கு இடையே வார்த்தை போர் துவங்க ஒரு கட்டத்தில் கூச்சல் அதிகமாக அதிகமாக போலீசார் கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்றனர். எதற்கும் செவி சாய்க்காமல் வார்த்தை போர் அதிகமானதால் சார் ஆட்சியர் கெளரவ்குமார், டென்சனில் மேஜை மீது ரெண்டு தட்டுத்தட்ட மேஜை மீது போடப்பட்டு இருந்த கண்ணாடி சல்லி சல்லியாக நொறுங்கியது. இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டோர் திகைக்க , பேச்சுவார்த்தை முடிவு பெறாமல் கலைந்து சென்றனர்.இது குறித்து மீனவர்கள் கூறுகையில்,சப் கலெக்டர் கூட்டத்தை சமாதனப்படுத்துவார்,உடன்பாடு ஏற்படும் நினச்சி வந்தால் கோபத்தில் கண்ணாடிய உடச்சிட்டாரே என புலம்பியபடி சென்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு இடையே சமாதான கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது