முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நெல்லையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, "ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக செயலில் உயர் அதிகாரிகள் ஈடுட்டனர். திமுக ஆட்சிக்கு வந்து 21 மாத காலம் நிறைவு பெற்று உள்ளது. இந்த ஆட்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டது கிடையாது. அதிமுக அரசில் தான் நிறைய பணிகள் செய்து உள்ளோம். அதிமுக ஆட்சியில் தான் 484 கோடி ரூபாயில் ஈரோடு நகரத்திற்கு குடிநீர் திட்டம் அமல்படுத்த அடிக்கல் நாட்டி அந்த பணி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 21 மாத காலமாக கிடப்பில் உள்ளது. குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்காத அரசாங்கம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். எங்கே சென்றாலும் மக்கள் கேள்வி கேட்டு கொண்டு இருக்கின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்தும் இன்னும் பல இடங்களில் வேஷ்டி சேலை வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. 


டெல்டா மாவட்டம் இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தான் அதிக இழப்பீட்டு தொகையை நாங்கள் பெற்று தந்தோம். எதிர்கட்சியாக இருக்கும் போது ஸ்டாலின் விவசாயிகளுக்கு 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் தற்போது 20 ஆயிரம் தான் கொடுத்து உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு தான் பேசுகிறார். இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக மீது மக்கள் கொந்தளிப்போடு இருக்கின்றனர். மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் பிரதிபலிக்கிறது. கடந்த 21 மாத ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் செய்தது அவரது தந்தைக்கு நினைவிடம் கட்டியிருக்கிறார்கள். மதுரையில் அவரது அப்பா பெயரில் நூலகம் அமைத்துள்ளார்கள். இது தான் எங்களுக்கு தெரிகிறது. பேனா ஒன்று வைக்க இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அது நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. கடலில் கொண்டு பேனா வைக்கிறார். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்று தான். அதை தரையிலேயே வைக்கலாம். அதை எவ்வளவு பேர் எதிர்க்கின்றனர். மீனவ சமுதாய மக்கள், அங்குள்ள பொதுமக்களின் கோரிக்கையை கேட்டார் என்றால் மிகுந்த எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டதை எண்ணி அவருடைய நினைவு மண்டபம் அருகிலேயே வைக்கலாம் என்பது எனது கருத்து




ரூ. 81 கோடியில் பேனா வைக்க வேண்டிய அவசியம் இல்லை, மீதி 79 கோடிக்கு எல்லா மாணவர்களுக்கும் பேனா வாங்கி கொடுக்கலாம். எழுதாத பேனா வைப்பதற்கு எழுதும் பேனா கொடுக்கலாம். 520 அறிவிப்புகளை வெளியிட்டார், அதை தலையணை போல வைத்து படுத்துக்கொள்ளலாம். அதில் முக்கியமான அறிவிப்பு என்னவென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் எங்களது கூட்டணி கட்சிகளும் குரல் கொடுத்தனர். அதில் குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்று. அதை கொடுத்தார்களா? மாதம் தோறும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக சொன்னார்கள். முதியோர் உதவித்தொகை 1000 இல் இருந்து 1500 ஆக உயர்த்தினர். நான் கொடுத்த முதியோர் உதவித்தொகை 7 இலட்சத்தையும் நிறுத்தி விட்டு. இது தான் அவர்கள் செய்த சாதனை.  மத்திய அரசு கூட பெட்ரோல் டீசல் விலையை குறைத்தனர்.  ஆனால் இந்த விடியா திமுக அரசு குறைக்கவில்லை.


தமிழகத்தில் நாள்தோறும் கொலை நடக்காத நாளே இல்லை எனலாம், போலிஸ் ஜீப்பை திருடிவிட்டு போகும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு உள்ளது. டெண்டர் விட்டால் டெண்டர் பெட்டியை திருடிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.  மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் குற்றம் அதிகரித்து உள்ளது. போதை பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது.  இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழியும் சூழல் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.  திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதால் இன்று சட்டம் ஒழுங்கு அடியோடு தமிழகத்தில் சீர்கெட்டு கொண்டு இருக்கின்றது.


இடைத்தேர்தல் முடிந்ததும் தமிழக முழுவதும் பயணித்து அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க திட்டமிட்டு வருகிறோம். அதிமுக கட்சி யாரை நம்பியும் இல்லை, அதிமுக தான் பல கட்சிக்கு உதவியாக உள்ளது. அதிமுகவிற்கு உதவியாக யாரும் இல்லை.  இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். அந்ததந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கும். எங்களது கூட்டணி தொடரும். ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய கட்சியை வளர்க்கதான் பாடுபடும். ஆனால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், நாட்டில் மின் கட்டண வரி, சொத்து வரி, குடிநீர் வரி உயர்ந்துள்ளது, ஆனால் இதைப்பற்றி திமுக கூட்டணி கட்சியில் உள்ள ஒரு கட்சியும் குரல் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இன்னும் பல கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் மக்களை பாதிக்கும் இந்த பிரச்சினைகளுக்கு அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. திமுகவை பொறுத்தவரை அங்குள்ள கூட்டணி கட்சி மூலம் திமுக மட்டும் தான் வளர்கிறது. மற்ற கட்சிகள் தேய்ந்து கொண்டு இருக்கின்றது.   திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் நாள் சென்றால் திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும்” என்றார்