தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் மு.மகேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் பி.விஜயராணி, பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கூட்டுறவு இணைப் பதிவாளர் முரளி கண்ணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் நாடுகாட்டு ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் மணிவண்ணன், பனை மரம் தொடர்பாக நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். பனை மரங்களினால் கிடைக்கும் பலன்கள், பனை பொருட்களில் இருந்து மதிப்பக்கூட்டு பொருட்கள் தயாரித்தல், குட்டை ரக பனை தொடர்பான ஆராய்ச்சிகள் போன்ற பல்வேறு விசயங்களை தெரிவித்தார். தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குநர் விஜயராணி, மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு, பயிர் சாகுபடி நிலவரம், வேளாண் இடுபொருட்கள் கையிருப்பு மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் குறித்து விளக்கினார்.
பின்னர் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர். எட்டயபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கடந்த ஆண்டு ராபி பருவத்தில் மழை பொய்த்து போனதால் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் மகசூல் கணக்கெடுப்பு விபரங்களை விவசாயிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர் லட்சுமிபதி, பயிர் காப்பீடு திட்டத்தில் மகசூல் கணக்கெடுப்பு விபரங்களை அனைத்து வேளாண் அலுவலகங்களிலும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும்படி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குரும்பூரை சேர்ந்த தமிழ்மணி பேசுகையில், மோசடியில் சிக்கிய குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் அடமான வைத்துள்ள நகைகள், முதலீடு செய்த பணம் போன்றவை விரைவாக திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவு இணைப்பதிவாளர் முரளி கண்ணன், குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ரூ.28 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதில் ரூ.17.50 கோடி பணத்தை திரும்ப கொடுக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக நிரந்தர வைப்பீடு தொகை ரூ.2.5 கோடி விரைவில் திரும்ப வழங்கப்படும். தொடர்ந்து விவசாயிகளின் சேமிப்பு பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களை முடங்கியுள்ளோம். அவைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த சொத்துக்களை விற்பனை செய்ததும், விவசாயிகளின் அனைத்து பணமும் முழுமையாக திரும்ப கிடைக்கும் என்றார்.
மதிமுகவை சேர்ந்த மகாராஜன் பேசுகையில், அனைத்து உரக்கடைகளிலும் விலைப்பட்டியல், இருப்பு விபரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த வேளாண்மை அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மகாராஜன் தொடர்ந்து பேசுகையில், மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் அதிகமாக சேதமடைகின்றன. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளின் மறைவிடமாக இருக்கும் வேலி கருவை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் கிடையாது. இந்த பகுதியில் உள்ளவை காட்டுப்பன்றிகள் இல்லை. கேமிராக்களை பொருத்தி ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளோம். இவைகள் சாதாரண நாட்டுப்பன்றிகள் தான். அவைகளை கட்டுப்படுத்த மற்ற துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசுகையில், பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்திட்டம் உருவாக்கியுள்ளோம். எனவே, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் உரம் தட்டுப்பாடு, தனியார் காற்றாலை நிறுவனங்களால் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தடுப்பணையில் மதகு அமைத்தல், பனை விதை நடவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அவைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.