தூத்துக்குடியில் மழை தண்ணீர் தேங்கியுள்ள பல்வேறு இடங்களில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, வஉசி சாலை லூர்தம்மாள்புரம் ஆரோக்கியபுரம், மேட்டுப்பட்டி, முருகன் தியேட்டர், கலைஞர் நகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலையின் ஓரங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையா நகர் மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர், லூர்தம்மாள் புரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள வீடுகளில் உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலமும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.
கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவ காலனி பகுதிகள் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை தொடங்கும் நிலையில் உள்ளது. இது பள்ளமான பகுதியாகும். நீரை பம்பு மூலம் வெளியேற்றுவதா? கிராவிட்டி மூலம் போய் விடுமா என்பதை கொண்டு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் மழை வந்துவிட்டது. மக்கள் புரிந்து கொள்கிறார்கள். மழை நீர் எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கே மக்களுக்கு காலை உணவு மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் பூங்காக்களுக்கு பல கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இருக்கக்கூடிய ரோடுகளையெல்லாம் குறுகலாக்கியுள்ளனர். இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. சி.வ. குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டெவலப் பண்ணினார்கள். ஆனால் அங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை” என குற்றம் சாட்டினார்.