விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடியில் அர்ஜுனா நதி, வைப்பாறு ஆற்றின் குறுக்கே கடந்த 2004ம் ஆண்டு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 அடி கொள்ளளவு கொண்ட நீர்தேக்கம் கட்டப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டம் அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழ் நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, செங்கோட்டை, அச்சங்குளம் போன்ற 9க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் பத்தாயிரத்து ஐநூறு ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்றவும், அயன்வடமலாபுரம், கீழ் நாட்டுக்குறிச்சி, மேலக்கரந்தை பாசன குளங்களுக்கு தண்ணீர் கொடுக்கவும் ஏதுவாக இந்த அணைக்கட்டப்பட்டது.
நீர்தேக்கம் கட்டப்பட்டு சுமார் 18 ஆண்டுகளில் ஒரு முறை கூட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது கிடையாது. அணை கட்டப்பட்டு 18 ஆண்டுகளில் அதன் முழுக் கொள்ளளவை நான்குமுறை மட்டுமே எட்டியுள்ளது. வைப்பாற்றில் இருக்கண்குடியிலிருந்து அயன் ராசாப்பட்டி, முத்துலாபுரம் - வேடப்பட்டி-சித்தவ நாயக்கன்பட்டி- விளாத்திகுளம் - வைப்பாறு கிராமம் வரை ஆற்றுப்படுகையில் இருபுறமுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் கிணறுகள், பாசன கிணறுகள், தொலைதூர கிராமங்களின் கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகள் உள்ளன.
இந்த ஆண்டில் இருக்கன்குடி அணை முழு கொள்ளளவை எட்டாவிட்டாலும் சுமார் 17 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில் கார்த்திகை பத்தாம் தேதி ஆகிவிட்டதால் கூடுதல் மழைக்கான அறிகுறி எதிர்பார்த்த அளவில் இருக்காது. வைப்பாறு வடிநிலக் கோட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அப்பனேரி, மேலக்கரந்தை, சிந்தலக்கரை, சின்னூர், பல்லாக்குளம் போன்ற 29 பாசன குளங்களில் ஒன்று இரண்டு தவிர பெரும்பாலான குளங்கள் போதிய தண்ணீர் இன்றி உள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கிராமங்களில் உள்ள ஊரணிகள் ,குளங்கள், குட்டைகள் நிரம்பவில்லை. எனவே மக்கள் நலன் கருதி இருக்கன்குடி அணையில் இருந்து வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கிராம மக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் கூறும்போது, சதுரகிரி மலை சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், சிவகாசி போன்ற பகுதிகளில் பெய்யக்கூடிய மழைக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைப்பாற்றில் வந்து சேர்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலம் தவிர்த்து கோடையில் கூட ஆற்றில் தண்ணீர் பாய்ந்தது. சுமாார் 30 ஆண்டுகளாக வைப்பாறு முறையாக பராமரிக்கப்படாததால் ஆற்றில் முழுவதும் சீமைகருவேல மரங்கள் முளைத்து வனம் போல் காணப்பட்டது.
இதனால் முழுமையாக நிலத்தடி நீர் அகல பாதாளத்திற்கு போய் வறண்டுவிட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு பின்வைப்பாற்றில் அயன்ராசாப்பட்டி முதல் -வைப்பாறு கிராமம்வரை ஆற்றில் முளைத்து வனம் போல காட்சியளித்த வேலி மரங்கள் தோண்டி அப்புறப்படுத்தி ஆற்றை மேடு பள்ளமின்றி சமதளமாக்கி விட்டனர். இதனால் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்ய ப்பட்டது. துரதிருஸ்டவசமாக இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு மழையை விட குறைவாக பெய்திருப்பதால் வைப்பாற்றில் தண்ணீர் வரத்து அறவே இல்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பேந்திருப்பதால் வாய்ப்பாட்டில் தண்ணீர் வரத்து சுத்தமாக இல்லை என்கிறார்.
இந்நிலையில், கார்த்திகை 10 ஆகிவிட்டதால் கூடுதல் மழைக்கான அறிகுறி எதிர்பார்த்த அளவில் இருக்காது எனக்கூறும் இவர், இதனால் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றுப் படுகையோர கிராம மக்கள் பெரிதும் பயனடைவர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தில் சிறு அளவை கூட இங்கு கொடுப்பதில்லை.
இருக்கண்குடி அணைக்கட்டு விருதுநகர் மாவட்டத்தில் கட்டபட்டிருந்தாலும் அதன் முழு தண்ணீர் பயன்பாடு கோவில்பட்டி கோட்டத்திற்கானதாகும். நமது மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் விருதுநர் மாவட்ட நிர்வாகம் இருக்கண்குடி அணைக்கட்டில் உள்ள தண்ணீரை சாத்தூர் குடிநீர் தேவைக்கு முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. எனவே எட்டையபுரம், விளாத்திகுளம் வட்ட மக்கள் நன்மை கருதி இருக்கண்குடி அணை கட்டிலிருந்து வைப்பாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.