தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வழியில் வண்ணாரப்பேட்டையில் உள்ள முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் வரும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் டாஸ்மாக் கடைகள், போதை பொருட்கள் நடமாட்டம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. போதை பொருள்களின் நடவடிக்கைகளில் 100 சதவீதம் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறு செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரசின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். ஆனால் அரசோ டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க கூட தயாராக இல்லை. குறைக்கிறோம் என்று ஒருபுறம் கூறி மறுபுறம் டாஸ்மாக்கில் புது மாடலாக டெட்ரா பாக்கெட்டில் மதுவை கொடுக்கும் நிலைக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் மாநிலம். அரசு டாஸ்மாக்கை முன்னேற்ற நினைப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஏற்கனவே தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் கெட்டு கிடக்கிறார்கள். இதில் டெட்ரா பாக்கெட்டில் மது அறிமுகம் செய்வது உண்மையில் தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல என அரசை எச்சரிக்கிறோம். இதுபோன்ற தவறான செயல்பாட்டில் அரசு ஈடுபடக் கூடாது. ஒரு காலக்கட்டத்துக்குள் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட கூடிய உறுதியான நிலையை அரசு எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்