தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தத்தளித்த மிளா வகை மானை மீட்டு  கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் கடலில் வந்த மானை ஏராளமான பொதுமக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மீட்கப்பட்ட மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.




தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஜெரோம். அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் முயல் தீவு கடற்பகுதி அருகே நண்டு வலை மீன்பிடிப்பதற்காக தனது பைபர்  படகில் மூன்று மீனவர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கே நடுக்கடலில் மான் ஒன்று கடலில் தத்தளித்தபடி நீந்தி கொண்டிருந்தது. இதை பார்த்த மீனவர் ஜெரோம் பின்னர் கரைக்கு வந்து மற்றொரு பைபர் படகில் மேலும் மீனவர்களை அழைத்துக் கொண்டு இரண்டு படகில் சென்று கடலில் தத்தளித்த மானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மானை மீட்டது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.




கடலில் தத்தளித்த இந்த மான் ஓட்டப்பிடாரம் காட்டுப் பகுதியில் இருந்து தருவைகுளம் கடல் பகுதி வழியாக கடலுக்குள் சென்று இருக்கலாம் என கூறிய வனத்துறையினர்  இந்த மான் மிளா வகையை சேர்ந்தது சுமார் 4 அடி உயரமும் ஒரு அடி உயர கொம்புகளுடன் 200 கிலோ எடைக்கு மேல் இருக்கும் என  தெரிவித்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட இந்த மானை இனிகோ நகர் கடப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிசயமுடன் பார்த்து சென்றதுடன் மானை மீட்ட மீனவர்களையும் பாராட்டி சென்றனர்.




பின்னர் மீனவர்களின் உதவியுடன் மானை வனக்காப்பாளர் லோடு ஆட்டோவில் ஏற்றி ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள சாலிகுளம் வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட மானை ஒப்படைக்க வனத்துறையிடம் மீனவர்கள் காலை ஆறு மணிக்கு தகவல் தெரிவித்தும் சுமார் 3 மணி நேரம் கழித்து ஒரே ஒரு வனக்காப்பாளர் மட்டும் வந்து மானை மீட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுதொடர்பாக மாவட்ட வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “கடற்கரை ஒட்டிய பகுதிகளில் உள்ள காடுகளில் இருந்து மிளா வெளியே வந்து இருக்கலாம், அப்பகுதியில் நாய்கள் ஏதாவது மானை துரத்தி இருக்கலாம், மான் தப்பி கடல் பகுதிக்குள் சென்று இருக்கலாம்” என தெரிவித்தனர்