உலகிலேயே முதல்முறையாக தோன்றியத் தாவரம் பனை தான் என்கிறது வரலாறு. கடுமையான வறட்சியிலும் பனை தளராது வளரும் திறன் கொண்டது.கற்பக விருட்சகம் என்பதாலும் நமது முன்னோர்கள் பனையை வளர்த்துள்ளனர்.பனை மரம் தமிழகத்தின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுப்பட்டது என்பதற்கும் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்களும், உணவுகளும் கிடைக்கின்றன. பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் கூடை, பெட்டி, பாய், ஓலை, விசிறி முதலியவையும் கிடைக்கின்றன. மேலும் பனங் கருக்கு, பாளை, பனங் கிழங்கு, பனை மட்டை, பனை ஓலை முதலியவையும் பனை மரத்தின் உறுப்புகளிலிருந்து கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் பொங்கலையும் பனை பொருட்களும் பின்னி பிணைந்து இருக்கிறது எனலாம். அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வீட்டு வாசலில் கோலமிட்டு மூன்று பொங்கல் கல்லை வைத்து மண் பானை அல்லது வெண்கல பானை கொண்டு பொங்கலிடுவது குறைந்து போனது என்றாலும் கூட இன்னும் தென் மாவட்டங்களில் வீட்டு வாயிலில் பொங்கலிடுவது பாரம்பரியமாகவே கொண்டாடப்படுகிறது.
பொங்கலன்று சூரியோதயத்திற்கு முன் வீட்டு வாசலை தெளித்து வண்ண வண்ண கோலங்கள் இடுவர். சிறுபிள்ளை பூ, வேப்ப இலை, பிரண்டை கிழக்கு மூன்றையும் இணைத்து கட்டி வீட்டின் தலைவாயிலில் சொருகி வைப்பார்கள். கிழக்கு பார்த்தப்படி மூன்று பொங்கல் கட்டிகளை வைத்து அதன் மீது வெண்கல பானை அல்லது மண் பானை வைத்து திருநீறு குங்குமமிட்டு நீரில் கலைந்த சம்பா பச்சரிசியின் தண்ணீரை பொங்கல் பானையில் நிரப்பிய பின் புதிதாக பனை மரத்தில் இருந்து அரியப்பட்ட பனை ஓலைகளை கொண்டு தீயிட்டு பொங்கல் பானையில் உள்ள தண்ணீர் கொதி நிலையில் பானையின் வெளியே சிறிது சிறிதாக கொட்டும் போது குலவையிட்டு கலைந்து வைத்திருந்த சம்பா பச்சரிசியை பொங்கல் பானையில் இடுவர். மூன்று பக்கமும் தீ வைக்கும் போது பொங்கல் பானை பொங்கும் பகுதியில் குடும்பத்தில் யார் அப்பகுதியில் தீயிடுகிறார்களோ அவர்களுக்கு பொங்கல்படி கூடுதலாக கிடைக்கும்.
பனை ஓலையின் வாசமும், பொங்கல் பானையில் கொதிக்கும் பொங்கலை பச்சை பனை மட்டையை கொண்டு கிளறும் போது ஏற்படும் பொங்கலும் சுவையோடு இருக்கும். அதே போல் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகலுக்கு முன்பு வரை பனை கருப்பட்டி பொங்கலே இடப்பட்டது. காலப்போக்கில் கருப்பட்டி மறந்து போய் மண்டவெல்லமாக மாறி போனது.
பொங்கல் பொங்கி இறக்கியவுடன் பொங்கல் பானையில் பூ சுற்றி, அதனோடு மஞ்சள் குலை சுற்றி விளக்கு முன் வைத்து உணவு தந்த விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடுவார்கள். பொங்கல் கட்டி வைத்திருந்த பகுதியில் பனை ஓலை சூட்டில் மூன்று பக்கத்திலும் எளிதில் ஜீரணசக்தி கொண்ட பனங்கிழங்குகளை சுட்டு அதன் வாசனையோடு படைப்பார்கள். பொதுவாக பொங்கலன்று கத்திரிக்காய் முதல் சிறுகிழங்கு, மூக்குத்தி பூ வரையிலும் சேர்த்து பொங்கல் குழம்பு வைக்கப்படுவது வழக்கம், அதன் சுவையை மீண்டும் அனுபவிக்க அடுத்த பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.
பனையை காக்க அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் கூட பனை தொழிலிலை காப்பாற்றும் வகையில் பொங்கல் தொகுப்போடு பனை கருப்பட்டி, பனங்கிழங்கு உள்ளிட்டவைகளையும் தமிழக வழங்கி இருக்கலாம் என்கின்றனர் பனை தொழிலாளர்கள்.