தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் லட்சத்து எழுபதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புரட்டாசி பட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி டெல்டா மாவட்டங்கள், சென்னை மாவட்டம் நீங்கலாக பெரும்பாலான மாவட்டங்களில் மானாவாரிசாகுபடி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களான கரம்பை மண் எனப்படும் வண்டல்மண், நீர் நிலைகளில் அள்ளி கோடைகாலங்களில் நிலங்களுக்கு பயன்படுத்தினர். தவிர வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் சாணங்களையும் உரமாக பயன்படுத்தினர்.




பின்னாளில் கால்நடைகள் வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டதால் கடந்த 25 ஆண்டுகளாக இராசாயான உரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இராசாயான உரத்திற்கு கடும் கிராக்கியானது. இதன் காரணமாக ஆண்டுக்காண்டு உரம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை உயர்வு ஏற்படும் போது உரம் விலையும் அவ்வப்போது விலை உயர்கிறது. தவிர அடி உரம் டிஏபி அரசு மானியம் போக 50 கிலோ மூட்டை ரூ.1350க்கும், யூரியா விலை அரசு மானியம் போக 45 கிலோ மூட்டை ரூ.275க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் டிஏபி, யூரியா உரம் விவசாய பயன்பாடு போக பல்வேறு பொருட்கள் தயாரிக்கவும் பயன்படும் என்பதால் சந்தையில் விவசாய பயன்பாடு என்ற போர்வையில் மானியத்தில் வழங்கப்படும் டிஏபி, யூரியா உரத்தை வேறு வணிகரீதியான தயாரிப்புக்கு பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும், பல ஆயிரம் கோடி ரூபாய் மானியம் விரையம் ஏற்படுவதை கட்டுப்பட்டுத்தும் விதத்திலும், அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா, பொட்டாஸ் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து பிஒஎஸ் (பாயின்ட் ஆப் சேல்ஸ்) மெஷினில் கைரேகை பதிவு செய்து பெறவேண்டும் என அரசு கடந்த நான்கு வருடங்களுக்கு முன் தெரிவித்தது. அதனடிப்படையில் தற்போது உரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.




இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் (21.02.23) அன்று விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு புதிய விதிமுறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. அதாவது உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் தங்களது   ஜாதி பற்றிய விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். அதில் பொதுப் பிரிவு, ஒபிசி, எஸ்.ஸி, எஸ்.டி இதில் எந்த வகையை சார்ந்தவர் என்ற விபரம் பதிவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, "அனைத்து சாதியினரும் விவசாயம் செய்கின்றனர். ஜாதி பற்றிய விபரம் குறிப்பிட்டால் மட்டுமே மானியம் விடுவிக்கப்படும் என்பது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சாதிக்கு தகுந்தவாறு உரம் மானியம் விடுவிக்கப்படும் பட்சத்தில் திட்டமிட்டு சாகுபடி பரப்பை விவசாயிகளிடம் பறிக்கும் செயலாக கருதப்படுகிறது. தவிர,தனியாரை ஊக்குவிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறும் அரசு அதை நசுக்குகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படும். வரும் காலத்தில் ஏழை எளிய நடுத்தர விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகள் நலன்கருதி மானியத்தில் உரம் வழங்கும் பிஓஎஸ் (பாயின்ட் ஆப் சேல்ஸ்) மெஷின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதி என்கிற களத்தை நீக்க வேண்டியது அவசியம்" என்கிறார்.