தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் அதிகம். வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயம் இருக்கிறது.




தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட சிறுதானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், எண்ணெய்வித்துக்கள், கடந்த இருபது நாட்களாக அறுவவடை செய்யப்படுகிறது. உளுந்து, பாசி,கம்பு, வெள்ளைச் சோளம், குதிரைவாலி, கொத்தமல்லி என முதற்கட்டமாக அறுவடை செய்யப்படுகிறது. பருவம் தவறி பெய்த மழையால் களத்துமேட்டில் விளைபொருட்கள் கறுத்து பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் தரம் குறைந்த விளைபொருட்கள் என்று கூறி அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். வேறுவழியின்றி விவசாயிகள் அதனை விற்க வேண்டி உள்ளது. அதனை பதப்படுத்தி சந்தையில் பெரும் லாபத்தில் விற்கின்றனர்.




விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அதனை கூடுதல் விலைக்கு எவ்வித தரகுமின்றி விற்பனை செய்ய வேளாண் வணிகத்துறை கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது. விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்து தனியார் உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது. கடந்த பல ஆண்டுகளாக நெல், கரும்பு மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகிறது.




கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்வது கிடையாது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடைகின்றனர். உழுது பாடுபட்டு உண்ணாமல் கொள்ளாமல் பசி பட்டினியுடன் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மிஞ்சியது நஸ்டமும் ஏமாற்றமுமேயாகும். வியாபாரிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டுகொள்ளாமல் தமிழக வேளாண் வணிகத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.தவிர தனியார் வியாபாரிகளிடம் கொள்முதல் விளைபொருட்கள் புள்ளி விபரங்களை பெற்றுக் கொண்டு பல ஆயிரம் டன் வினைபொருட்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவிக்கிறது.




விவசாயிகளுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்ட வேளாண் வணிகப் பிரிவு எவ்வித செயல்பாடுமின்றி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளாவர். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு பொதுவிநியோக திட்டத்தில் இலவசமாக அரிசி வழங்குவதுபோல், இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளை அரசு ஈடுகட்டுவது போல் கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, குதிரைவாலி, எள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் கொள்முதல் பொதுவிநியோக திட்டத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார்.