ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் கிராமத்தில் கருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த 14 வருடங்களுக்கு பிறகு  நடந்தது. இந்த நிலையில் இவ்வூரை சேர்ந்த பலரும் கோயில் கொடை விழாவிற்காக கிராமத்துக்கு வந்திருந்தனர். தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் மீனா. மீனாவும் தாதன்குளம் கள்ளவாண்டசுவாமி கோயில் தெருவில் உள்ள தனது சித்தி பார்வதி வீட்டுக்கு கோயில் கொடை விழாவிற்கு வந்திருந்தார். அவர் இரவு 9 மணிக்கு சித்தி வீட்டில் இருந்த போது மீனாவின் தந்தை சுடலைமுத்து உள்பட 5 பேர்  அரிவாளுடன் வந்து மீனாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் தாதன்குளம் வந்து மீனா உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது “தாதன்குளத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து, இவர் தற்போது பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீனா. மீனா கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு நிஷாந்த் என்ற 4 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். நிஷாந்த் இசக்கிப்பாண்டியனிடம் வசித்து வருகிறார்.




இதற்கிடையில் மீனா, நான்குநேரி அருகில் உள்ள பட்டப்பிள்ளை புதூரை சேர்ந்த முத்து என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும்  பாளையங்கோட்டையில் தனி வீடு எடுத்து குடியிருந்து வருகின்றனர். மீனா இரண்டாவதாக திருமணம் செய்ததை உறவினர்கள் சுடலைமுத்துவிடம் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது கணவருடன் அவர் சுதந்திரமாக சுற்றுலா சென்று அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். மூத்த திருமணம் செய்து குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு மீனா இரண்டாவது கணவருடன் சுற்றுவது தந்தை சுடலைமுத்துவிற்கு பிடிக்கவில்லை.  




இந்த நிலையில் தாதன்குளத்தில் கோவில் திருவிழாவிற்காக மீனா தனது சித்தி பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவல் சுடலைமுத்துவிற்கு தெரிந்துள்ளது. சுடலைமுத்து, தன்னோடு தனது இரண்டாவது மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, சுடலைமுத்துவின் அண்ணன் மனைவி வீரம்மாள், அவரது மகன் முருகன் ஆகியோருடன் சென்றார். மீனாவை தட்டிகேட்டார்.




இதற்கிடையில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் மீனா அங்கேயே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர் அங்கு வரவே, அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து மீனாவின் சித்தி பார்வதி செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி, வீரம்மாள் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய அண்ணன் முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.