தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து வீர முழக்கமிட்ட வீர பாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த கோட்டை வெள்ளையர்களால் தகர்க்கப்பட்ட நிலையில் கிடைக்கிறது. அதனருகே கட்டபொம்மன் நினைவாக ஒரு கோட்டை அமைக்கப்பட்டுள்ளது இந்த கோட்டை வளாகத்தில் கட்டபொம்மன் வழிபட்ட வீரசக்கதேவி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை நிர்வகிக்கக்கூடிய தனிநபர் தொல்லியல் துறை உட்பட அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் ஆலய வளாகத்திற்குள் புதிதாக கட்டிடங்களை கட்டி வருகிறார். இது கட்டபொம்மன் ஆட்சி செய்த பழைய கோட்டையை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே கோட்டை வளாகத்தில் கட்டக்கூடிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்,வீரசக்க தேவி அம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும் என வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளான வீமராஜா, இந்துமதி, ரவீந்திரன், முத்துக்குமார், ஆகியோர் கலெக்டர் செந்தில்ராஜுடம் அளித்தனர் . அதனை தொடர்ந்து வீரபாண்டியன் கட்டபொம்மன் நேரடி வாரிசு இந்துமதி கூறுகையில், “பாஞ்சாலங்குறிச்சி, தொல்லியல் துறை கட்டுபாட்டில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையை பழைய பாரம்பரிய நினைவு சின்னங்களை அழிப்பது சேதப்படுத்துவது மற்றும் தொல்லியல்துறை விதிகளை மீறி கட்டடம் கட்டுவது போன்ற பல விதிமுறைகளை முருகபூபதி சில ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு கோட்டையில் இருக்கும் வீரசக்க தேவி அம்மன் கோவில் முன்பு அகழாய்வு செய்யப்பட்டுள்ள 3 அள்ள இடத்தில் பழைய செங்கல் கட்டிடத்தை பூங்கா அமைக்கிறேன் என்று முழுவது தகர்த்து விட்டார்கள்.
தனியாக ஒரு குழு அமைத்து கொண்டு தொல்லியல் துறை இடத்தில் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலித்து வணிக வளாகம் கட்டி வந்தார். அதனை தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தி விட்டது. ஆனால் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. அரசு நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை உச்ச நீதிமன்ற உத்தரவு படி அகற்ற வேண்டும். கட்டபொம்மன் விழாவிற்கு அனுமதி இல்லாமல் ஜேசிபி வைத்து சுத்தம் செய்கிறேன் என்று சுவர்களை சேதப்படுத்தியுள்ளனர். கோட்டையின் பின்வாசல் சாவி முருகபூபதியிடம் உள்ளது. இரவு 7 மணிக்கு மேல் கோவில் நுழைவு வாயிலை திறந்து வைத்திருக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் சட்ட விதிமீறல்களை மேற்கொண்டு வருவதற்கு சில அரசு அதிகாரிகளே துணை இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவோடு முருகபூபதி இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் சேர்ந்து அக்கிரமம் செய்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவோருக்கு சட்ட நடவடிக்கை எடுத்து இனிமேல் இதுபோன்று எந்த ஓரு தனிநபரோ அல்லது குழுவோ சேர்ந்து கொண்டு தொல்லியியல் இடங்களை சேதப்படுத்தி அழிக்காமல் இருப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்” என்றனர்.
வீரசக்க தேவி அம்மன் கோவில் பெயரை சொல்லி பொதுமக்களிடம் அரசு அனுமதியின்றி குழு அமைத்து கொண்டு கட்டாய வரி வசூல் செய்து வருகிறார். வசூல் தொகைக்கு எந்த ஒரு முறையான வரவு செலவு கணக்கு தமிழக அரசுக்கும் எங்களுக்கும் இதுவரை தரவில்லை. வருடத்திற்கு 50 லட்சத்திற்கு மேல் பணம் வசூல் செய்கிறார்கள் சட்டத்திற்கு புறம்பான பணம் வசூலில் ஈடுபட்டு வரும் இந்த தனியார் குழுவை உடனடியாக கலைத்து விட்டு சட்ட நடவடிக்கை எடுத்து தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.