தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவ சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையான முறையில் திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு பேராலயத்தின் 440-வது ஆண்டு பெருவிழா அனைத்து நிகழ்வுகளுடன், முழுமையான பக்தர்கள் பங்கேற்புடன் வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாளான அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன் மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை காலை 8.50 மணிக்கு ஆயர் ஏற்றி வைத்தார். கொடி ஏற்றப்பட்ட போது சமாதானத்தை குறிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து ஏராளமான வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்ச்சையாக பால் குடம், வாழைத்தார் போன்றவைகளை கொடிமரத்தின் பீடத்தில் வைத்து வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கொடிமரத்தின் பீடத்தில் வைத்து அன்னையிடம் ஒப்பு கொடுத்தனர். கொடியேற்றம் முடிந்ததும் பால் மற்றும் பழத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பனிமய மாதா பேராலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்பி தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில் சாதாரண உடையில் ஏராளமான போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்களை அணிவித்தனர். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
திருவிழாவில் வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6-ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழாவில் இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, ஆகஸ்ட் 5-ம் தேதி பெருவிழா நாளில் காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி ஆகியவை ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகின்றன.
10-ம் திருவிழாவான ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் பேராலயத்தை சுற்றி அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்துள்ளனர்.
தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதற்கு பதிலாக 13-08-22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்