தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (21), சுதர்ஷினி (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சுதர்ஷினி 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் 3 பேரும் முன்னுக்குபின்னாக தகவல் கூறியுள்ளனர். மேலும் செல்வக்குமார் உடற்கூறாய்வில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வக்குமார் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் அதை ஊரைச் சேர்ந்த கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்வகுமாரின் மனைவி பாக்கியலட்சுமி கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் ராஜாபுதுக்குடி. எங்கள் ஊரின் அருகில் உள்ள தலையால் நடந்தான் குளம் செல்வகுமார் என்பவருடன் எனக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு கார்த்திகா, சுதர்ஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடுமையான மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த எனது கணவர் பல வருடங்களாக தினமும் குடித்துவிட்டு என்னையும், எனது மகள்களையும் மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். இதனால் நான் மட்டுமின்றி எனது மகள்களும் எனது கணவர் மீது மிக வெறுப்புடன் இருந்தோம். இதற்கிடையில் எனது மாமியார் தனது இடத்தை விற்று எனது கணவர் பங்காக மூன்று லட்சத்தை கொடுத்ததை எனது கணவர் வாங்கி அவரது அக்காளிடம் கொடுத்து வைத்திருந்தார். நாங்கள் கேட்டபோதும் அதனை கொடுக்கவில்லை. மேலும் எனது மூத்த மகள் கார்த்திகாவுக்கும் எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் கந்தவேல் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இது எனது கணவருக்கு பிடிக்கவில்லை. அவர் இதுபற்றி மிக ஆபாசமாக எங்களை பேசியதுடன் கந்தவேலை சந்தித்து உன்னை வெட்டிக் கொன்று விடுவேன் என சத்தம் போட்டார்.
இந்நிலையில் என்னை சந்தித்த கந்தவேல் ஏன் உங்கள் கணவர் உங்களை ஆபாசமாக பேசி வருகிறார் என கேட்டார். நான் அவரிடம் அவரது கொடுமைகள் தாங்க முடியவில்லை. பேசாமல் அவர் செத்து தொலைவதே மேல் எனக்கு என்று கூறினார். இதற்கு கந்தவேல் அவர் தானாக சாக மாட்டார் நீங்கள் தான் அவரை கொலை செய்ய வேண்டும் என கூறினார். நாங்கள் பெண்கள் எப்படி கொலை செய்ய முடியும் என கேட்டதற்கு நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என கந்தவேல் கூறினார். மேலும் எப்படி கொலை செய்வது என்பது பற்றி எனது மூத்த மகளுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகளை அனுப்பினார். அதற்கு நாங்களும் சம்மதித்தோம். எப்பொழுதும் எனது கணவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தான் உறங்குவார். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு எனது கணவர் ஹோட்டலில் உணவு வாங்கி விட்டு வந்து மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார். நானும் எனது மகள்களும் கந்தவேலுடன் எங்கள் வீட்டினுள் காத்திருந்தோம்.
நான் இரவு 11.45 மணிக்கு மொட்டை மாடிக்கு சென்று எனது கணவர் உறங்கி விட்டாரா என பார்த்தபோது அவர் மார்பு வரை போர்வையால் மூடி உறங்கிக் கொண்டிருந்தார். உடனே கீழே வந்து ஏற்கனவே தயாராக வைத்திருந்த தலையணை மற்றும் துண்டுடன் நாங்கள் நான்கு பேரும் மொட்டை மாடிக்கு சென்றோம். கந்தவேல் எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தபடி நான் தலையணையால் எனது கணவரின் முகத்தை அழுத்த கந்தவேல் அவரது கைகளால் என் கணவரின் இடதுகை மற்றும் கால்களால் விலாவில் அழுத்தி பிடித்துக் கொண்டார். மூத்த மகள் கார்த்திகா அதே போன்று வலது கை மற்றும் வலது விலாவை அழுத்திக் கொண்டார். இளைய மகள் சுதர்ஷினி எனது கணவரின் இரண்டு கால்களிலும் ஏறி உட்கார்ந்து கால்களை அழுத்தி பிடித்துக்கொண்டார்.
ஆனாலும் எனது கணவர் திமிறி என்னை கொலை செய்கிறார்கள் என்று கத்தவே நான் கொண்டு வந்த துண்டால் அவரது வாயில் திணித்து அடைத்தேன். சிறிது நேரத்தில் எனது கணவர் மூச்சுப் பேச்சின்றி இறந்தார். உடனே அவரது வாயில் இருந்த துண்டை எடுக்கும் பொழுது வாயில் இருந்து வெளியே வந்த ரத்தம் எனது நைட்டி மற்றும் எனது மூத்த மகள் அணிந்திருந்த ஆடையிலும் பட்டது. உடனே நாங்கள் போர்வையால் எனது கணவரின் உடலை தலை வரை மூடி விட்டு கீழே இறங்கி நானும் எனது மகள்களும் எங்கள் வீட்டுக்கும், கந்தவேல் அவரது வீட்டிற்கும் சென்று விட்டோம். மேலும் ரத்தக்கரை படிந்த உடைகளை கழட்டி அருகிலுள்ள சாக்கடையில் வைத்துவிட்டு காலையில் எரித்து விடலாம் என முடிவு செய்தோம். அதிகாலை 5 மணி அளவில் உறவினர்களை அழைத்து எனது கணவர் மாடியில் இறந்து கிடக்கிறார் என கூறினேன். ஆனால் எனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதாலும், எங்களை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்து நாங்கள்தான் கொலை செய்தோம் என போலீஸாரிடம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டோம் என பாக்கியலட்சுமி ஒப்புதல் அளித்து உள்ளார்.