நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(38) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் விவசாய தொழில் செய்து வந்த நிலையில் தற்போது சென்னையில் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். இச்சூழலில் நேற்று வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சேரன்மகாதேவியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தருவையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டு சேரன்மகாதேவியில் இருந்து வந்தபோது கோபாலசமுத்திரம் விளக்கு அருகே காரில் வந்த மர்ம நபர்கள் கணேசனை வழிமறித்து வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து கணேசன் அங்கிருந்த வயல்வெளி பகுதிக்கு ஓடிய போது அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.


இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் வயல்வெளியிலேயே கணேசன் சுருண்டு விழுந்தார். இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர் பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதோடு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதற்கட்ட  விசாரணையில், ஏற்கனவே 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் கணேசன் கைது செய்யப்பட்டு கடந்த  4 மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வெளி வந்துள்ளது தெரியவந்துள்ளது.


குறிப்பாக இந்த கொலை சம்பவம், இதற்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? என்பது தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னீர் பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வயல்வெளியில் ஓட ஓட விரட்டி ஒருவரை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண