தூத்துக்குடி கடல் பகுதியில் இழந்த முத்து வளத்தை புதுப்பிக்கும் புதிய முயற்சியாக மத்திய கடல் மீன்வள ஆராயச்சி நிலையம் சார்பில் வளர்க்கப்பட்ட 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. 




தூத்துக்குடி கடல் பகுதியில் ஒரு காலத்தில் முத்துகுளித்தல் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இங்கு கிடைக்கும் முத்துக்கு உலக அளவில் தனிச்சிறப்பு உண்டு. இதனால் தூத்துக்குடி தற்போதுவரை முத்துநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கடந்த 1961-ம் ஆண்டுடன் தூத்துக்குடியில் முத்துக்குளித்தல் தொழில் நிறுத்தப்பட்டுவிட்டது. கடலில் முத்து வளம் அழிந்து போனதால் முத்துக்குளித்தல் தொழில் நிறுத்தப்பட்டது. முத்துச்சிப்பிகள் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சங்கு குளித்தல் தொழிலுக்கு மாறினர்.




இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் இழந்த முத்து வளத்தை புதுப்பிக்கும் புதிய முயற்சியை தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தங்கள் பொரிப்பகத்தில் முத்துச்சிப்பி குஞ்சுகளை வளர்த்து, அவைகளை கடலில் விடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 5 லட்சம் முத்துச்சிப்பி குஞ்சுகள் வளர்க்கப்பட்டுள்ளன.




அவைகளை கடலில் விடும் நிகழ்ச்சி தூத்துக்குடி சுனாமிநகர் கடற்கரை பகுதியில் நடைப்பெற்றது. மத்திய கடல் மீன்வள ஆராயச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி பி.எஸ்.ஆஷா தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு முத்துச்சிப்பி குஞ்சுகளை கடலில் விடும் பணிகளை துவக்கி வைத்தார்.இது குறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறும்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் முத்து வளம் குறைந்ததால் முத்துக்குளித்தல் தொழில் கடந்த 1961-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது கடலில் முத்துச்சிப்பி வளத்தை பெருக்கும் வகையில் முத்துச்சிப்பி குஞ்சுகளை எங்கள் பொரிப்பகத்தில் வளர்த்துள்ளோம்.கடலில் இருந்து தாய் முத்துச்சிப்பிகளை சேகரித்து வந்து, அவைகளை எங்கள் பொரிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்ய செய்து குஞ்சுகளை வளர்த்துள்ளோம். தொடக்கத்தில் நுண்ணுயிர் போல மிகச்சிறியதாக இருக்கும் முத்துச்சிப்பி குஞ்சுகளை 3 மாதங்களாக பொரிப்பகத்தில் வளர்த்து 5 மி.மி., அளவுக்கு வளர்த்துள்ளோம். தற்போது 5 லட்சம் குஞ்சுகளை வளர்த்துள்ளோம்.




முத்துச்சிப்பிகளை பொறுத்தவரை பவளப்பாறை, கற்கள் நிறைந்த பகுதிகளில் தான் வளரும். அத்தகைய இடங்களை தேர்வு செய்து குஞ்சுகளை இருப்பு வைத்து உள்ளோம். தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகேயுள்ள சுனாமி நகர் கடற்கரை பகுதி மற்றும் சிப்பிகுளம் கடல் பகுதியில் இவைகளை விட்டு உள்ளோம். முத்து சிப்பி குஞ்சுகள் இயற்கையாக கடலில் திறந்த வெளியில் விடப்படுகின்றன மேலும் 6 விதவை கூண்டுகளிலும் முத்துச்சிப்பிஞ்சுகளை இப்பகுதியில் வளர்க்க உள்ளதாக தெரிவித்த அவர் அதற்கான கூண்டுகளும் தற்போது மிதக்க விடப்பட்டுள்ளன முத்துச்சிப்பிஞ்சுகளின் வளர்ச்சி உள்ளிட்ட தரவுகளை தொடர்ந்து கண்காணித்து ஆராய்ச்சி செய்வதற்காக விதவை கூண்டுகளில் வளர்க்கப்படுகிறது என்றனர்.




மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஆஷா கூறும்போது, எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் தான் இந்த முத்துச்சிப்பி குஞ்சுகளை வளர்த்துள்ளோம். மேலும், முத்துச்சிப்பி குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசிடம் நிதியுதவி கோரி கருத்துரு அனுப்பியுள்ளோம். விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் தூத்துக்குடி பகுதியில் முத்துச்சிப்பி வளம் பெருக வாய்ப்புள்ளது என்றார்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறும் போது, முத்து குளித்தல் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது அவர்களது பொரிப்பகத்தில் வளர்க்கப்பட்ட 5 லட்சம் முத்து சிப்பிக்குஞ்சுகள் தூத்துக்குடி சுனாமி நகர் மற்றும் கீழ வைப்பாரு ஆகிய இரண்டு கடற் பகுதியில் விடப்படும். அதற்காக மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி நிலையம் நமது கடல் பகுதியில் இருந்து தாய்ச்சிப்பிகளை சேகரித்து தங்கள் பொரிப்பகத்தில் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்த்துள்ளனர்.முத்துச்சிப்பி வளர்ப்பு மூலம் மீனவர்கள் மகளிர் சுய உதவி குழுவினருக்கு எந்த வகையில் பலனளிக்க முடியும் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கலந்து ஆலோசித்து திட்டங்கள் வகுக்கப்படும் அடுத்த ஆண்டு முத்து அறுவடை செய்து அதனை விற்பனை செய்வதற்காக வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றார்