கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆசிரியருக்கு ஆதரவாக அவர் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில்  11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

 

இந்த நிலையில் சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.

 



 

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திருப்பமாக ஆசிரியருக்கு ஆதரவாக அவர் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

 



 

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, மாணவிகள் சிலர் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு சினிமா பாடல் எழுதியதை கண்டித்த ஆசிரியர், அதனை அனைவர் மத்தியில் படித்து காண்பித்துள்ளார். மேலும் தவறு செய்த மாணவிகளை வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வர கூறிய நிலையில் தேவையில்லாமல் மாணவிகள் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஆசிரியர் மீது சிலரின் தனிப்பட்ட அழுத்தம் காரணமாக போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தனர்.