நெல்லை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கனிம வளங்கள் கடத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதோடு தீவிர நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். அதன்படி, நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த விஸ்வநாதபுரம் விலக்கில் பழவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரிகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்தவித அனுமதியுமின்றி சரள் மண் (கனிம வளம்) கேரளாவிற்கு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கனரக லாரியை ஓட்டி வந்த அம்பை தாலுகா புலவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28) மற்றும் சங்கரன்கோவில் தாலுகா சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபாலன் (42) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 கனரக லாரிகளையும், 10 யூனிட் சரள் மண்ணையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். விசாரணையில் அந்த 2 லாரிகளும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழவூர் காவல் நிலையத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ( எப்ஐஆர்) மூன்றாவது குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் தினகரனின் பெயரை சேர்த்துள்ளனர். வழக்குப்பதிவை தொடரந்து 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பியின் மகன் தினகரன் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நெல்லையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கல்குவாரி விபத்தில் 4 தொழிலாளர்கள் குவாரியில் சிக்கி உயிரிழந்தனர்.
இதனால் ஏற்பட்ட தொடர் நடவடிக்கையாக ஆட்சியர் எடுத்த நடவடிக்கையின் பேரில் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி கணேசனிடம் குவாரி மூடப்பட்டிருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்பி ஞானதிரவியம், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் ஆட்சியரை பதில் சொல்லும் படி கோபத்துடன் கட்டளையிட்டனர். குவாரிகளை திறக்க சொல்லி அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை எம்பி ஞானதிரவியம் நேரடியாக மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களிலும் வைரலானது. தனக்கும் குவாரி இருப்பதால் தனது சுயலாபத்துக்காகவே இதுபோன்று ஆட்சியரை எம்பி மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது குவாரி மணல் கடத்தல் வழக்கில் எம்பி ஞானதிரவியம் மகன் சிக்கியுள்ள சம்பவம் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்