தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெர்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்கள், அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சாதாரண கூட்டத்தில் 9 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 2 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கூடுதலாக 10 பள்ளிகளில் பயிலும் 1,819 மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்துவது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இணைக்கப்பட்ட மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.137.71 கோடி மதிப்பில் மேற்கொள்ள ஒப்புதல் அளிப்பது ஆகியவை முக்கியமானதாகும்.
தொடர்ந்து கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, மாநகராட்சி பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட நாளிதழை மட்டும் வாங்கக்கூடாது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் தி இந்து, இந்து தமிழ் திசை உள்ளிட்ட அனைத்து முக்கியமான நாளிதழ்களையும் வாங்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சிறிய கோயில்களில் நடைபெறும் அன்னதானம் போன்ற விழாக்களுக்கு மாநகராட்சி சார்பில் டேங்கர் லாரி மூலம் இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என பேசினர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, "புதிய மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டும் மாநகராட்சி பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் நடப்படவுள்ளன. இதே போன்று மாநகராட்சி பகுதியில் பல்வேறு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பில் இருந்த பூங்காக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 300 பேர் உள்ளனர். தினமும் 150 பேர் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதே போன்று காய்ச்சல் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் அதிகமாக காய்ச்சல் தென்பட்டால், அங்கு மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் தனிநபருக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மாநகராட்சியை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக செடிகளுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதனை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 'தூத்துக்குடி கார்ப்பரேஷன்' என்ற செயலியை புகார்கள் மற்றும் குறைகள் தெரிவிக்க அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த செயலி தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்றார்.