நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே கீழ தென்கலம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் நபர் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம்  தெருவில் சூரியா என்ற கம்பெனி பெயரில் Vim சோப்பு விற்ற நபர்களிடம் சோப்பு வாங்கி பின்னர் உள்ளார். பின்னர் சோப்பு விற்றவர்கள் குலுக்கல் முறையில் பரிசு கொடுப்போம் என்று கூறி பெயர், முகவரி, மற்றும் தொலைபேசி எண்ணை பெற்று சென்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து சூரியா கம்பெனியில் இருந்து மேனேஜர் பேசுவதாக கூறி குலுக்கல் முறையில் தங்கக்காசு , SONY TV மற்றும் Scooty பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு பொருளை   அனுப்புவதற்காக Tax கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்காக Rs.36,550 செலுத்தி பரிசுப்பொருளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.  அதனை நம்பி பணத்தை கட்டியுள்ளார். ஆனால் பரிசு பொருளை அனுப்பாமல் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து பின்னர் அந்த நபர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் புகார் மனு அளித்தார். 
 
இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அதன்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையிலான சைபர் கிரைம் காவல்துறையினர், வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து மற்றும் அய்யனார் ஆகியோரை கடந்த 13.01.2023 –ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் போலியான ஆவணங்கள் மூலம்  SIM கார்டுகள் பெற்று கொடுத்த மொபைல் கடை நடத்தி வரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ்(43) என்பவரை கடந்த 30.01.2023 –ம் தேதி கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா(37) என்பவரை 16.02.2023-ம் தேதி கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சங்கரன்கோவிலை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் முருகன்(22) ஆகிய இருவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மாவட்டத்தில் பல இடங்களிலும் இம்மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  எனவே இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் தேவையில்லாத செயலியை  பயன்படுத்தி லோன் பெறக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களை  பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும், அதன் மூலம் புகைபடங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் கேட்பார்கள். அதே போல உங்கள் தொலைபேசி தொலைந்தால் பேங்கில் உள்ள உங்கள் பணமும் தொலைந்து விடும் எனக் கூறியும் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தமில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் கேட்டுகொண்டுள்ளனர். மேலும் பரிசு விழுந்துள்ளதாகவும், பேங்க்-ல் இருந்து மேனஜர் பேசுவதாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம், பணத்தை முதலீடு செய்தால் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என சொல்லி இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் என கூறுபவர்களிடம் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம்.  ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதை நம்பி ஏமாறாதீர்கள், உங்கள் தெருக்களில் சோப்பு வியாபாரம், துணி வியாபாரம், பாத்திர வியாபாரம் மற்றும் அழகு பொருட்கள் வியாபாரம் செய்ய வரும் நபர்களிடம் தொலைபேசி எண்ணை கொடுப்பது முற்றிலும் ஆபத்தானது, பண விரயத்தை ஏற்படுத்தும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பார்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. எனவே பொதுமக்கள் தங்களுடைய பெயரில் இருக்கும் போலி SIM கார்டு பற்றிய தகவல் அறிய https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது மொபைல் எண் மூலமாக உள் நுழைந்து தேவையற்ற மற்றும் போலியான SIM கார்டுகள் குறித்து புகார் அனுப்பலாம். மேலும் சைபர் க்ரைம் தொடர்பாக புகார் செய்ய 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம், அதேபோல சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.