நெல்லையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் பெயரை மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு மாற்றியமைத்தது. எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் கடந்த 2022 முதல் உரிய நிதியை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. காரணம் புதிய கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்கின்றனர்.. புதிய கல்விக் கொள்கை மீது மாறுபட்ட கருத்து ஒன்றும் தமிழக அரசுக்கு இல்லை. இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் உள்ளது தமிழகம். இங்கு தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ பட்டதாரிகள் இருப்பதும் தமிழகத்தில் தான். மத்திய அரசு கல்விக்காக அனைத்து விருதுகளையும் தமிழகம் தான் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு சிறந்த கல்வி இருக்கும் நிலையில் அதற்கு இடையூறு செய்யும் விதமாக புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
2035க்குள் அனைத்து மாநிலத்திலும் 50 சதவீதத்திற்கும் மேல் கல்வி அறிவு பெற்றவர்கள் உருவாக்கப்படுவார்கள் என புதிய கல்விக் கொள்கைகள் சொல்லப்படுகிறது ஆனால் தற்போது தமிழகம் 51% ஆகிவிட்டது. பெண் கல்வி இந்திய அளவில் 26%, தமிழகத்தில் பட்டம் படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் 60-70% பேர் உள்ளனர். அப்படியென்றால் எதை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவேண்டும்.கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதிய கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தை ஒரு மொழி பாடமாக படிக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக 7 நாடுகளில் தமிழ் மொழி உள்ளது. அப்படிப்பட்ட தமிழை அனைவரும் படிக்க சொன்னால் சரி, 25000 பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதால் மும்மொழி கொள்கையை நாம் ஏற்கவில்லை, 5ம் வகுப்பில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த மாணவர் தாய், தந்தை செய்யும் தொழிலுக்கு செல்லுங்கள் என்கிறது ஒன்றிய அரசு, இதை தான் தமிழக முதல்வர் எதிர்த்து வருகிறார். நீட் தேர்வு போன்றவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை படிக்க வைக்க வேண்டும் என்று செய்கின்றனர். தமிழ்நாட்டை குறி வைத்து அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதை தான் நாம் எதிர்க்கிறோம். அகில இந்திய அளவில் கலைக்கல்லூரிக்கு நீட் தேர்வு போன்று தேர்வு வைக்க வேண்டும் என்கின்றனர். மத்திய அரசு சமூக நீதிக்கு, மக்களுக்கும் விரோதமான சட்டங்களை கொண்டு வருவதை எதிர்க்கிறோம் என்பதால் நமக்கு தர வேண்டிய நிதி பங்களிப்பை தர மறுக்கின்றனர். அது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே 3 ஆண்டுகளில் வெளி நாடுகளில் இருந்து நிறைய முதலீடுகள் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் அமெரிக்கா சென்று மிகப்பெரிய தொழிலதிபர்களை சந்தித்து மிகப்பெரிய முதலீடோடு தமிழகத்தில் அந்த வாய்ப்புகளை முதல்வர் உருவாக்கி தருவார். பல லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவார். அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தங்களது கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும், ரஜினிகாந்த் வயதானவர் என்றாலும் இளமையாக நடித்தால் தான் அது நடிப்பு. வயதாக வயதாக பழுத்த பழம் போல் ஆக ஆக, ஏன் கலைஞர் 93 வயதில் எப்படி இருந்தார். அவர்களது அனுபவங்கள் தான் நாட்டிற்கு தேவை. அவர்கள் தான் எப்போது வழிகாட்ட வேண்டும் என்றார்.