திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. இதன் அருகில் அருவிக்கரை வனப்பேச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அதோடு இந்த கோவிலானது மணிமுத்தாறு அணைப்பகுதியில் அமைந்துள்ளதால் அணை தண்ணீரில் மூலம் விவசாய நிலத்திற்கு பாசன வசதி  பெறும் 18 கிராம மக்களும், விவசாயிகளும் இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்த சூழலில் இத்திருக்கோவிலில்  கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி வனத்துறையின் பல்வேறு கட்டுபாடுகளுடன் நடைபெற்றது.


தொடர்ந்து வருகின்ற 3.9.2024 செவ்வாய் கிழமை அன்று  வன பேச்சியம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் வனத்துறையின் கட்டுபாட்டிற்குள் இப்பகுதி அமைந்துள்ளதால் முறையான அனுமதி வாங்குவதற்காக கோவில் நிர்வாகத்தினர் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்திற்கு சென்ற நிலையில் அங்கு கோவில் கொடை விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி தடை விதித்து கோவில் கொடைவிழா நடத்த  வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், ஆலடியூர், கல்லிடைக்குறிச்சி உட்பட 18 கிராம பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று திரண்டனர்.


தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலகத்திற்கு சென்று அதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால்  அம்பாசமுத்திரம் -  பாபநாசம் நெடுஞ்சாலையில்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. அதோடு வனத்துறை அலுவலகம் முன்பு குவிந்த மக்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடிய காட்சி அங்கிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மணிமுத்தாறு அருவிக்கரை பேச்சியம்மன் கோவிலில் கொடை விழாவை  நடத்தவும், கோவிலில் திருப்பணிகள் செய்வதற்கு கட்டுபாடுகளுடன் கூடிய அனுமதியும் வழங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.