திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு பாலம் மீண்டும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




தாமிரபரணி ஆறு மேம்பாலம்:


கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலையை பொறுத்தவரை, தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்.


அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும். மேலும் தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. அங்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வரும்.இந்த நான்கு வழிச்சாலை பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரம்மாண்டமான பாலம் அமைக்கப்பட்டது.




தொடர்ந்து சேதமடையும் பாலம்:


இந்த சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு புகார்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதுவரை 7 முறை பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை.இந்த பாலம் அமைக்கப்பட்டதில் இருந்தே பலமுறை பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாலத்தின் இரு பகுதியையும் ரூபாய் 4 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது.


அதன்பின்னர் தொடர்ந்து பல முறை இந்த பாலம் சேதமடைந்தது. இந்த நிலையில் கடந்த 25.9.22 அன்று ரூபாய் 13.22 கோடி மதிப்பில் இரு புறமும் உள்ள பாலத்தில் மேல்தளம், சாலைகள் சீரமைத்தல் மற்றும் பாலத்தை பலப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பாலப்பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு வருட காலத்தை தாண்டியும் இந்த பாலப்பணிகள் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை.




6 வருடத்தில் 11 பேர் உயிரிழப்பு:


இதற்கிடையில் இன்று ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வரும் சாலையில் திடீரென்று பாலம் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பாலத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருநெல்வேலி தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு மட்டும் கடந்த 6 வருடத்தில் இந்த இடத்தில் மட்டும் 11 பேர் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.