தூத்துக்குடியில் ஓலைப்புட்டு இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சர் தெரு மாநகராட்சி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைப்புட்டு இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்ததாவது:


’’தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் முனைப்போடு முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.




ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகம் ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து 2ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எத்தனையோ போராட்டங்கள், கஷ்டங்களை தாண்டி வெற்றிகரமாக நடத்தி வரும் சகோதரிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டில் சமைப்பதற்கும், ஓட்டலில் சமைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டு சிறப்பாக செய்து வருகிறீர்கள்.


இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் சின்ன சின்ன பிரச்சனைகளையும் கடந்து பணியாற்றி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவினை வாங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன். மேலும் இங்கு வந்துள்ள தொழிலதிபர்களும் தங்களுடைய வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவினை வாங்கி பரிமாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.




இதனால் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதுடன் தூத்துக்குடி, திருநெல்வேலி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இவர்கள் ஒரு முன்னோடியாக இருந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக மாறுவதற்கு உங்களுடைய ஆதரவு பெரிய அளவில் இருக்கும். ஒவ்வொரு நாளும் பல்வேறு போராட்டங்களை தாண்டி வெற்றிகரமாக இந்த உணவகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் அனைவரின் ஆதரவுகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.’’



 


இவ்வாறு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.