நெல்லை மாவட்டம் என்றாலே அல்வா, தாமிரபரணி, பத்தமடை பாய் என்ற பல்வேறு சிறப்புகள் உண்டு, குறிப்பாக பத்தமடை என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது பாய் தான், அந்த அளவிற்கு பத்தமடை பாய் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த பாய்கள் அனைத்தும் பெண்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கி அந்தஸ்தளித்தது. இந்த நிலையில் மற்றொரு சிறப்பாக செடிப்புட்டா சேலைகளும் அதன் அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் தயாரிக்கப்படுகிறது.
குறிப்பாக அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளாங்குழி, கிழாக்குளம் ஆகிய ஊர்களில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கைத்தறி நெசவு தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் செடிப்புட்டா சேலை வகைகள் மற்றும் பட்டு வகை சேலைகளை இயந்திரம் இன்றி கைத்தறி நெசவுகளைக் கொண்டு கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்படும் நூல்களை பெற்று சேலைகளை நெய்து வருகின்றனர். இப்பகுதிகளில் இவர்களால் நெய்யப்படும் செடிப்புட்டா சேலைக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இச்சேலைகள் சுத்தமான பருத்தி நூல்களாலும், எந்த ஒரு கெமிக்கல் இன்றியும், மூலிகை செடிகள் மூலம் கிடைக்கும் கலர்களைக் கொண்டு இச்சேலை நெய்யப்படுகிறது.
மேலும் இத்தொழிலை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. செடிப்புட்டா சேலை வகைகள் இப்பகுதிகளை தவிர உலகில் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்புக்குரியது. இவ்வகை சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று இப்பகுதி தொழிலாளர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர். புவிசார் குறியீடு கிடைத்தால் நாங்கள் தயாரிக்கும் இவ்வகை சேலைகளுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும். இதன் மூலம் எங்களுடைய தொழில் வளர்ச்சி மேம்படும். எனவே புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி தற்போது செடிப்புட்டா சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கி உள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பத்தமடையில் தயாரிக்கும் பாய்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த நிலையில் மேலும் இத்தொகுதியை சிறப்பிக்கும் வண்ணம் வீரவநல்லூர் பகுதியில் இயந்திரம் இன்றி கைத்தறிகளால் செய்யப்படும் செடிப்புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது. இத்தொழிலை நம்பி இருக்கும் குடும்பத்தினரை மிகப் பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்