நெல்லை மாநகராட்சியின் 36-வது வார்டு மாமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த  சின்னத்தாய் என்பவர் உள்ளார். இவர் இன்று தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு பாளை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சரோஜினி நீர்த்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாநகராட்சி அதிகாரி உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் மூலம்  கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் இதனை நிவர்த்தி செய்யவில்லை. மேலும் தற்போது வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகத்தை விராஜ் என்ற தனி நபரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அந்த  நாள் முதல் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது.


மேலும் வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் ஜாதி அடிப்படையில் அதனை கண்டு கொள்வதில்லை.  மேலும் அதிகாரிகள் மற்றும் தனது சொந்த கட்சியினர் இடையே ஜாதி பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது.  இவர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான பணிகளை செய்யமுடியவில்லை.


தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலையில் நான் அவமானப்பட்டேன். இந்த நிலை தொடர்வதால் நான் எனது 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். 


இச்சூழலில் ராஜினாமா கடிதத்தை ஆன்லைன் மூலமாக மேயர் சரவணன் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


ஏற்கனவே 7வது வார்டு கவுன்சிலர் இந்திராமணியும் ராஜினிமா கடிதத்தை ஆணையரிடம் வழங்கினார். ஆனால் கையெழுத்து இல்லாததால் அவர் அதை ஏற்கவில்லை. குறிப்பாக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மாமன்ற உறுப்பினர்கள் இடையே தொடர்ந்து நிலவும் கோஷ்டி பூசல் தான் இப்பிரச்னைக்கு காரணம் என்றும், பெரும்பாலான கவுன்சிலர்கள் எம்எல்ஏ அப்துல்வகாப்பின் ஆதரவாளர்களாக உள்ளனர். அனைவரும் அப்துல்வஹாப் மாவட்ட செயலாளராக இருந்த போது அவரால் கவுன்சிலர் சீட் பெற்றவர்கள். அப்துல் வஹாப்புக்கும் மேயர் சரவணனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்போக்கு தான் நாளடைவில் கவுன்சிலர்கள் மேயர் இடையேயான கோஷ்டி பூசலாக மாறியது என்று சொல்லப்பட்டு வந்தது.


அதனால் மேயரை கண்டித்து சொந்தக்கட்சி கவுன்சிலர்களே மன்ற கூட்டங்களில் போராட்டம் நடத்துவதும், மேயர் மீது ஊழல் புகார் கூறுவதுமான நிலை நீடித்து வந்தது.. அதோடு மேயருக்கு எதிராக சொந்த கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமானது. இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஒரு மாதத்திற்கு மேலாக அமைதி நிலவிய நிலையில் தற்போது கவுன்சிலர் சின்னத்தாயின் நடவடிக்கையால் மீண்டும் கோஷ்டி பூசல் தலைதூக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.




சின்னத்தாய் ராஜினாமா கடிதம் வழங்கியது குறித்து மேயர் சரவணனிடம் கேட்டபோது, மருத்துவ காரணங்களுக்காக சென்னை வந்திருப்பதாகவும், தனக்கு இதுகுறித்த தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் பதிலளித்தார். இதற்கிடையில் ராஜினாமா செய்யப் போவதாக ஆணையரிடம் நேரில் கடிதம் கொடுக்கவில்லை வாட்ஸ் அப் குழுவில் தான் பதிவிட்டோம். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ராஜினாமா முடிவை கைவிட்டுவிட்டதாகவும் கவுன்சிலர் சின்னத்தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது