நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது  மேலஏர்மாள்புரம் கிராமம். இப்பகுதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் வசித்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகளுக்கு  திருமணம் நடைபெற்றுள்ளது. இதே நேரத்தில் அப்பகுதியில் மற்றொரு தரப்பை சேர்ந்த வேலு என்ற 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த தெருக்களில் இந்த இரண்டு நிகழ்வும் நடந்துள்ளது. அப்போது இறந்த முதியவர் வேலுவின் உடலை திருமணம் நடைபெற்ற பாஸ்கரின் வீட்டின் வழியாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது திருமண வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்து  மேளதாளத்துடன் ஆடி உள்ளனர்.  இந்த சூழலில் வேலுவின் உடலை அப்பகுதி வழியாக கொண்டு செல்லக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வேலுவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறி உள்ளது. வேலுவின் உடலை கீழே வைத்துவிட்டு இரண்டு தரப்பினரும் மாறி மாறி கையில் கிடைத்த கம்பு, கற்கள்,கட்டை என தாக்கினர். மேலும் அங்கு வந்த மினி பேருந்தின் பின்பக்க கண்ணாடியையும் உடைத்து சண்டையிட்டனர். சண்டை முற்றிப்போக இருதரப்பிற்கும் கை, கால்,  மண்டை உடைந்து பெரிய போர்க்களமாக மாறி உள்ளது.


இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம்  காவல்துறையினர் இருபிரிவினரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அங்கிருந்து எடுத்து செல்ல வைத்தனர்.  வேறு வாகனம் மூலம் உடல் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது. இந்த மோதலில் சுமார் 7க்கும் மேற்பட்டவர்களுக்கு மண்டை, கை, கால் உடைந்த நிலையில் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.  அதோடு கலவரத்துக்கு காரணமான மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஒரே ஊரை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்டு சிறிது நேரத்தில் ஊரே போர்க்களமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.