திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 6 பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 6 பெண்கள் உட்பட 41 பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.




திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சுமார் 200 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கோயில் புலவர் மகாமுனி உதவி மானேஜர் சொர்ணம், வசூல் எழுத்தர்கள் ரவிக்குமார், வேல்முருகன், உதவியாளர்கள் சபாகரன் சண்முகம் ஆகிய 6 பேரை திருவண்ணாமலை, பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு பணி இடமாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். இந்நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவு கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களை பணியில் இருந்து விடுவித்தும்  உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோயில் சிப்பந்திகள் கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் மற்றும் அனைத்து பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், பணியை புறக்கணித்து இணை ஆணையர் அலுவலகம் முன்பு  அமர்ந்து  மதியம்  திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து பணியாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் வீராங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் திரளான பணியாளர்கள் பங்கேற்கின்றனர். போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் டிஎஸ்பி ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் ஏராளமான போலீசார் வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.




இதனையடுத்து கோயில் பணியாளர்கள் இணை ஆணையர் அலுவலகம் வாசலில் இருந்து எழுந்து, அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் குறித்து கோயில் பணியாளர்கள் தரப்பில் கூறும்போது, ரூ.300 கோடியில் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மூத்த பணியாளர்கள் பல்வேறு கோயில்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களை இடமாறுதல் செய்வதால், கடன் பெற்ற பணியாளர்களிடம் பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு சம்பளம் பெறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பணியாளர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி  இந்தப் போராட்டத்தை தொடர்கிறோம் என்றனர்.




இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் கூறும்போது, நிர்வாக நலன் கருதி அனைத்து கோயில்களிலும் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அது போலவே இங்கேயும் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியாளர்களை இடமாற்றம் செய்ய ஆணையருக்கு ஐகோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே பணியாளர்களின் போராட்டம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு சட்டத்திற்கு விரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.




தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 6 பெண்கள் உட்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர். பணியாளர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.