தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மானவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனுடன் கால்நடைகள் வளர்ப்பினையும் அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர். கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் தண்ணீர் எளிதில் கிடைத்தும் விடும் என்றாலும் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் கோடை காலங்களில் தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிது. ஆகையால் கோடை காலம் தொடங்கியதும் தாங்கள் வளர்த்த கால்நடைகளை விற்பனை செய்வதை விவசாயிகள் வழக்கமாக்க்கி கொண்டுள்ளனர். ஆனால் கோவில்பட்டி, கருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. அதற்கு காரணமாக விளங்கும் ஒரே நபராக கருப்பூரைச் சேர்ந்த 80 வயதான முதியவர் சித்தவன் விளங்குகிறார்.

 



 

80 வயது என்று கூறப்பட்டாலும் இன்றைக்கும் இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கும் உடல்வாகுடன் கிராமத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருபவர் சித்தவன். தனது இளமை காலத்தில் சித்தவன் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு இருந்த போது ஒரு நாள் மதியம் சில ஆட்டுக்குட்டிகள் தனது நிலத்தில் கிடந்த சிறிது தண்ணீரை ஆவலாக வந்த தண்ணீர் அருந்துவதையும், அதன் பின்னர் ஆட்டுகுட்டிகள் துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் ஓடியதை கண்டுள்ளனர். நாம் கால்நடைகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க கூடாது என்ற எண்ணம் அவரின் மனதில் உதிக்க அன்று முதல் இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளுக்கு  இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார்.

 


 

இன்று மின் மோட்டர் பயன்பாடு இருந்தாலும் அன்றைக்கு ஆயில் என்ஜின் மோட்டர் தான். இருப்பினும் டீசல் வாங்கி ஊற்றி தினமும் தனது கிணற்றில் இருந்து நிலத்தில் ஒரு பகுதியில் தண்ணீரை தேங்கி வைத்து அப்பகுதிக்கு வரும் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் அருந்தி செல்லும் வசதியை ஏற்படுத்தினர். சித்தவனின் ஏற்பாடு காட்டு தீயை போல பரவ கருப்பூர் மட்டுமின்றி அருகில் தோமலைப்பட்டி, வடமலாபுரம், கோட்டூர், உப்பத்தூர் என சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் தினம் தங்களது கால்நடைகளை தண்ணீர் குடிப்பதற்காக சித்தவன் நிலத்திற்கு அழைத்து வர தொடங்கினார். தினமும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சித்தவன் நிலத்தில் கால்நடைகளின் கூட்டத்தினை பார்க்க முடியும், சித்தவன் நிலத்தினை பார்த்தும் கால்நடைகள் துள்ளி குதித்து வந்து தண்ணீர் அருந்தி விட்டு, சித்தவனை முகத்தினை பார்த்து விட்டு நன்றி கூறியது போல கூறிவிட்டு ஓடும் காட்சி மனதிற்கு நெகிழ்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.

 


 

கருப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் தினமும் சித்தவன் நிலத்திற்கு வந்து தண்ணீர் அருந்தி தங்களது தாகத்தினை தீர்த்து இளைப்பாறி விட்டு செல்கிறது. அது மட்டுமல்லாது மின் மோட்டர் போடுவதற்கான சாவியும் அங்கேயே வைத்து விட்டு சென்றுவிடுவார் அல்லது திறந்து வைத்து விட்டு சென்று விடுவதால் கால்நடை வளர்ப்பவர்கள் சித்தவன் இல்லை என்றும் மின் மோட்டார் போட்டு தங்களது கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டி விட்டு செல்கின்றனர். கால்நடைகளுக்கு மட்டுமின்றி அருகில் பனை தொழில் செய்ய வரும் குடும்பங்களுக்கும் சித்தவன் தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறார். ஒருபுறம் தண்ணீர் தாகம் தீர்க்கும் சித்தவன், மறுபுறம் ஊரில் மரகன்றுகளை நட்டு கிராமத்தினை பசுமையாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். 



 

50 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவது பற்றி சித்தவன் கூறுகையில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது, ஆடுகள் தண்ணீர் குடிப்பதை ஆவலாக பார்த்தேன். அன்றில் இருந்து ஆடு, மாடுகளின் தண்ணீர் தாகத்தினை தீர்க்க வேண்டும் என்று கருதி தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறேன். முதன் முதலில் ஆயில் மோட்டர் மூலம் நீரை இறைத்து தண்ணீர் வழங்கினேன். தற்பொழுது மின் மோட்டர் வைத்து வழங்கி வாயில்லா ஜிவன்களுகளுக்கு தண்ணீர் வழங்கி வருகிறேன். எப்போது வந்தாலும் தண்ணீர் இல்லை என்று திரும்ப சென்று விடக்கூடாது என்பதற்கான மின்மோட்டர் போடும் பகுதியை திறந்து வைத்துள்ளதாகவும், கால்நடை வளர்ப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் மோட்டர் போட்டு கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும் மனிதனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டால் என்ன மனநிலை இருக்குமோ, அதே நிலை தான் கால்நடைகளுக்கு இருக்கும் என்ற எண்ணத்தில் தண்ணீர் வழங்கி வருவதாகவும், கிராமத்தில் பசுமை உருவாக்க வேண்டும் என்பதற்காக மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், இதனால் தனது மனதிற்கு மகிழ்ச்சி தருவதால் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவிக்கிறார்.