கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் மீன்பிடிக்கையில், அதாவது கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலான அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களை விரட்டி அடிக்கும்  நடவடிக்கையில் ஈடுபடும்  இலங்கை கடற்படையினர் ஒட்டுமொத்தமாக அனைத்து மீனவர்களையும் துரத்தியடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் அவர்களால் பாரம்பரியமாக தொழில் செய்துவரும் மீனவர்கள் அனைவருமே இலங்கை கடற்படையினரால் துரத்தியடிக்கப்பட்டுவதால் நஷ்டம் ஏற்பட்டு  வாழ்வாதரம்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



சில நேரங்களில் துப்பாக்கி சூடும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது என ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவசரமாக கூட்டம் நடத்திய விசைப்படகு மீனவர்கள் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனுமதி இல்லாமல் நிறுத்தியுள்ள விசைப்படகுகளை அப்புறப்படுத்த கோரியும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் ஒரு வார காலம் வேலை  நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம்  நிறைவேற்றியுள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிர த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் கடல் வளத்தை அழிக்கும், இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை குறிப்பிட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் அழிவதோடு, மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிப்பாட்டுள்ளது. அத்தகைய மீனவா்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதால் தடை செய்யப்பட்ட வலைகளை அச்சமின்றி பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனா். இதனால் இந்திய- இலங்கை மீனவா்கள் பிரச்னை, உள்ளூா் மீனவா்கள் பிரச்னை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.



தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ராமேசுவரம் மீனவா்களைப் பாதுகாக்க தமிழக அரசும், மீன்வளத்துறையும் மீன்பிடி தொழிலை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனுமதி இல்லாமல் நிறுத்தியுள்ள விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் ஒரு வார காலம் வேலை  நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம்  நிறைவேற்றியுள்ளனர்.