பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அடுத்த முதல்வர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர், ஆசை படுவது தவறில்லை. விஜய் உள்ளிட்ட யார் வந்தாலும் கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம். பாஜக எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. பாஜக மதவாத கட்சி என சொன்னது யார்? எது மதவாதம்? மதவாதம் என்பது ஒரு மைனாரிட்டி மக்களோடு ஆதரவு செய்வது போல் பேசிவிட்டு இன்னொருவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தான் மதவாதம். நாங்கள் எந்த மதத்திற்காகவும் பிரச்சாரம் செய்யவில்லையே. எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் என்பது உண்மை தான். மற்றவர்களை போல் நான் மறுக்கவில்லை, ஆனால் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. அதுகுறித்து ஏன் பேசவில்லை, இப்போதும் ஒரு செவிலியர் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மத்திய அரசு தான் அனுமதி கொடுத்துள்ளது என்றார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு என சொல்வது தவறு. அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். நடிகர்கள் மட்டுமல்ல, கரகாட்டம் ஆடுபவர்கள் உள்ளிட்ட எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம், அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும். பாரதிய ஜனதா கட்சி சார்பில் எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்க உள்ளோம். நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிக்க வேண்டும். ஏனென்றால் நெல்லையில் பருவமழை பெய்யவில்லை தவறிவிட்டது. குளங்களில் நீரிருப்பு இல்லை. தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது, வறட்சி மாவட்டமாக அறிவிப்பது உள்ளிட்டவைகளுக்காக முதல்வரை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ராஜ்பவன் மாறுவதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்ட திட்டங்களில் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் சில முரண்பாடுகள் இருக்கிறது. வேந்தர் அதிகாரம் ஆளுநருக்கு வேண்டும் என கருணாநிதிதான் தெரிவித்தார் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் தற்போது வேண்டாம் என்கின்றனர். அப்போதைய காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. அமலாக்கத்துறை தனி நிர்வாகம். தமிழக அரசு முதல்வர் பற்றி சமூகவலைதளங்களில் பதிவு செய்தால் அதனை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர். ஆகவே பழி வாங்கும் நடவடிக்கை என்று தான் சொல்ல முடியும் என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்