கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் தங்கப்பன் (73),  இவர் அப்பகுதியில்  தேவசம் போர்டு பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்று உள்ளார், பின்னர் முந்திரி பயிரிட்டு தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார், இவர் ஏற்கனவே தனது இளமை பருவத்தில் எம்ஏ வரலாறு மற்றும் எம்எட், எம்பில், பிஏஎல் ஆகிய படிப்புகளை முடித்துள்ள நிலையில் உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடங்கியுள்ளார்.


இதனையடுத்து முனைவர் பட்டத்திற்கான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார் குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் கனகாம்பாளை வழிநடத்துனராக  கொண்டு தனது ஆய்வை துவக்கியுள்ளார் 




தொடர்ந்து, இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது, காந்திய கொள்கைகள் மூலம் பயங்கரவாதத்தை எவ்வாறு வேரறுப்பது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் தங்கப்பன் பல்வேறு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு தனது பி.ஹெச்டி படிப்பை முடித்துள்ளார், இருப்பினும் கொரோனா காரணமாக தங்கப்பனுக்கு பிஎச்.டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது, இந்த சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றுக் கொண்டார், தற்போது தங்கப்பனுக்கு 73 வயது ஆகிறது, இதுபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டம் வாங்குவது வழக்கமான விஷயம் தான் என்றாலும் கூட நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் பயங்கரவாதம் குறித்தும், அதில் காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பில் முதியவர் தங்கப்பன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே. 




இது குறித்து தங்கப்பன் கூறுகையில், ”தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும், தனது இறுதி நாள் வாழ்வின் முழுமையும் கல்வி கற்க வேண்டும் எனவும் காந்திய கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கிறார், மேலும் நான் வெறும் பட்டத்துக்காக படிக்கவில்லை என்றும் காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது என்றும் தெரிவித்தார், மேலும் வரும் இளைய தலைமுறையினரும் காந்திய கொள்கையை பின்பற்றி அகிம்சை, அன்பு வழியில் பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறினார். கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு இவரை போன்றோர் மிகப்பெரிய முன்னுதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை