தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் அந்தோணிராஜ் (53). இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று வேலைக்கு சென்று இருந்தபோது, வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் மாவட்டம் அம்மன்நகரை சேர்ந்த ஜேக்கப் மகன் மனோஜ்ராஜ் (35), கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக்ராஜா (24), ராஜாராம் (26), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூர்யாநகரை சேர்ந்த விருமாண்டி மகன் திலீப்திவாகர் (26) என்பது தெரியவந்தது. மேலும் இந்த 4 பேரும், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஜெயிலில் இருந்த 4 பேரையும் விசாரணைக்காக கோர்ட்டு மூலம் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களை சிப்காட் போலீஸ் வழக்கிலும் கைது செய்து, நடத்திய விசாரணையில், அந்தோணிராஜ் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து திருட்டு போன 14 லட்சம் மதிப்பிலான 44 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் 4 பேரையும் திருச்சி ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நகையை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்களான மனோஜ்ராஜ் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 10 திருட்டு வழக்குகளும், எதிரி கார்த்திக் ராஜா மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 12 திருட்டு வழக்குகளும், எதிரி ராஜாராம் மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 வழக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 16 திருட்டு வழக்குகளும், எதிரி திலீப் திவாகர் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 14 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.