நெல்லையில் நடக்கும் பனை தேசியத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பனைமரம்  முழுவதும் பயன் தரும் அதனை பாதுகாக்க நாம் தவறி விட்டோம். தற்போது விதைத்தாலும் கூட அது வளர்ந்து பலன் தர பல ஆண்டுகள் ஆகும். அதன் எல்லா பகுதியும் நமக்கு பயன் தரும், ஆகவே பனை வளர்ப்பை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அனைத்து பணிகளுக்கும் மத்தியில் பனைக்காக இங்கு வந்துள்ளேன்,  அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை உருவாக்க நாம் நினைக்கிறோம் அவர்கள் அரிவாளை தூக்கிக்கொண்டு திரிவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதில் சாதிய வேற்றுமைகள் களையப்பட வேண்டும். புத்தகத்தை எடுத்து திரிய வேண்டியவர்கள் கத்தியை எடுத்து திரிவது மிகுந்த வேதனையான விஷயம்” என்று கூறியுள்ளார்.


“அதே ஊரில் 50 குடும்பங்கள் சாதிய வேற்றுமை கொடுமைகளினால் அந்த தெருவை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கும் தகவல்கள் கவலை அடைய செய்துள்ளது. அப்படியென்றால் அங்குள்ள நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காவல்துறை ஏன் இதை கண்காணிக்க மறுத்தார்கள் என மிகப்பெரிய கேள்வியாக நம் மனதில் எழுகிறது.. கட்சியை தாண்டி, சாதிய அமைப்புகளை தாண்டி, குழுக்களை தாண்டி எல்லோரும் சிந்திக்க வேண்டிய காலகட்டம். சின்னத்துரை நல்ல முறையில் படித்தார் என்பதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.  அரசை தாண்டி பொதுமக்களும் சிந்திக்க  வேண்டும்” என்றார்


”கட்சி கூட்டங்கள், ஓட்டுக்காக சாதியை உபயோகப்படுத்துவது என அல்லாமல் அதனையும் தாண்டி சாதிய கொடுமைகள் எங்கெல்லாம் இருக்கிறது என அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் மற்ற  மாநிலங்களை பற்றி கவலைப்படுகிறோம், ஆனால் நம்ம மாநிலத்தை பார்த்து கவலைப்படுவதில்லை, முதலில் நம்ம  மாநிலத்தை பார்ப்போம் என்பதுதான் எனது கருத்து” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”கர்நாடகாவில் எங்கள் கூட்டணி ஆட்சி இருந்தால் வழிநடத்தி கொண்டு வந்துவிடுவோம் என சொன்னவர்கள் இன்று வெளிநடப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. கட்சியை தாண்டி கூட்டணியில் இருந்தும் கூட அவர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்று கொண்டு வர முடியாத சூழ்நிலையில் தான் அரசியல் இருக்கிறது என்பதை இந்த ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.


”கர்நாடகத்தில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைபயணம், போராட்டம்  என்ற நிலை எடுத்த தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என மிதமாக நடந்து கொள்கிறது. இவ்ர்கள் அணுக வேண்டிய வழியில் கர்நாடக அரசை அணுகவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதி தனிப்பட்ட முறையில் தனது நட்பை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை இங்குள்ள ஆட்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். செங்கோல் தமிழர்களின் பெருமை, அடையாளம். அதனை மதம் சார்ந்து பார்ப்பதில்லை. தமிழகத்தில் 40 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைகின்றனர். 


50,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் பரிட்சைக்கே செல்லவில்லை. ஆனால் அரசு இல்லாத இந்தி திணிப்பை பற்றி பேசுவதில் குறியாக உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டை போடுவதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தருவதில் குறியாக இல்லை என்பது வருத்தம். ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது அரசின் சாதனைகளை பிரதமர் பேசுவது இயல்பு. அதை பொறுமையாக கேட்காமல் வெளி நடப்பு செய்தார்கள். இந்த அளவு தான் பேசனும், இந்த அளவு பேசக்கூடாது  என யாரும் சொல்ல முடியாது.


ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த நாட்டிற்கு என்ன செய்தோம் என பிரதமர் பேசுவதற்கு உரிமை இருக்கிறது, நாம் நினைக்கிறதை தான் பிரதமர் பேசவேண்டும் என நினைக்கிறது எப்படி சரியாக இருக்க முடியும்” என தெரிவித்தார்.