நெல்லை மாநகரையடுத்து உள்ளது மகிழ்ச்சி நகர் பகுதி. இப்பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி. பல் மருத்துவராக இருக்கும் இவர் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் தினமும் கிளினிக் செல்லும் முத்துசாமி பணி முடிந்து வீடு திரும்பும் போது தினந்தோறும் தனது மகன்களுக்கு தலா 500 ரூபாய் கொடுத்து வந்ததாக தெரிகிறது. அப்பா கொடுக்கும் பணத்தை இருவரும் தனக்கென உள்ள உண்டியலில் சேமித்து வைத்து வந்துள்ளனர். அதன்படி மொத்தம் 6 உண்டியல்களில் சேமித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் முத்துசாமி குடும்பத்தினருடன் சொந்த ஊரான நாங்குநேரிக்கு சென்றுள்ளார். பின் நேற்று இரவில் வீடு திரும்பி் உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பெருமாள் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மகன்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்திருந்த உண்டியல்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. குறிப்பாக இருவரும் சேர்ந்து குறைந்தபட்சம் அந்த உண்டியலில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. பீரோவை சோதனை செய்த போது பீரோவில் இருந்த 10க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகளும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. நல்வாய்ப்பாக நகைகள் ஏதையும் அவர் வீட்டில் வைக்கவில்லை என்பதால் அவை திருடு போகவில்லை. தொடர்ந்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வர வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வ்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இரவு நேரத்தில் வீட்டில் பூட்டை உடைத்து பணம், பட்டுப்புடவைகள் கொள்ளைபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநகரப் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் சம்பவம் நடைபெற்று உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்