வாழ்வில் மனிதர்கள் அனைவருமே நீண்ட ஆயுளும்,  ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என நினைப்பது உண்டு. ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் பல நேரங்களில் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். எதிர்பாராத விபத்துக்கள், திடீர் உடல் நலக்கோளாறு , தற்கொலை முயற்சிகள் போன்ற நிகழ்வுகள் பலரின் வாழ்வை முடித்து மரணத்தை தந்ததுண்டு, இது வாழ்நாளில் நிகழும் மரணம்.  ஆனால் சிலருக்கு வாழும்நாள்களே மரணமானதும் உண்டு.. அப்படி தங்கள் வாழ்வில் ஒருநொடி பொழுது அசம்பாவிதங்களால் ஒட்டுமொத்த வாழ்வே புரண்டுப்போய் புத்துயிர் பெற தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பல தண்டுவட பாதிப்புக்குள்ளான நபர்கள். 


தென்காசி மாவட்டம் கீழாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரம்மநாயகம், உலகநாயகி தம்பதியரின் இரண்டு மகன்களில் மூத்தமகன் அருண்குமார்,  ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் B.com படித்து உள்ள இவர் படித்துக் கொண்டு இருக்கும் போதே விளையாட்டு, NCC  போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துக் கொண்டவர், கல்லூரி இறுதி ஆண்டில் சிஆர்பிஎஃப்- ல் ஜவானாக சேர்வதற்கு எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வுகளில் கலந்துக் கொண்டு  தேர்வாகியுள்ளார். பணியில் சேர்வதற்கான அழைப்புப் கடித்துக்காக காத்திருக்கும் தருணத்தில் அருண் குமாரின் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது அந்த விபத்து, 




2004 ஆம் வருடம் மே மாதம் பேருந்தில் அதிக கூட்டம் இருந்த காரணத்தினால் எல்லா இளைஞர்களுக்கும் வாடிக்கையாகிப்போன அதே படிக்கட்டுப்பயணம்  அருண்குமாரின் வாழ்க்கை பயணத்தினையும் திசைதிருப்பியது. வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தின் படிக்கட்டின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த அருண்குமார்  சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகம்பி ( பேரிகார்டு)  மீது மோதி கீழே விழுந்தார். அதனால் ஏற்பட்ட முதுகுதண்டுவட பாதிப்பால் எழுந்து நடக்க முடியாமல் போனது.  மருத்துவமனை சிகிச்சைக்கு பின் முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, இடுப்பிற்கு கீழ் எந்த உணர்ச்சிகளும் இல்லை எனவும், சக்கர நாற்காலி வாழ்க்கை தான் இனி உங்களுக்கு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்  வீட்டில் அடைந்துக் கிடக்கும் சூழல் ஏற்படவே மனமுடைந்தார் அருண்குமார்.




இந்நிலையில் பணியில் சேருவதற்கான சிஆர்பிஎஃப் அழைப்பு கடிதம் வந்தது, ஆனால் அந்த பணியில் சேர்வதற்கு இயலாத நிலை அருண் குமாருக்கு ஏற்பட்டதை நினைத்து மனம் வருந்தினார். பின்னர்  தண்டுவட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் உன்னத பணியை தென்காசி ஆய்க்குடி அமர்சேவா சங்கம் செய்து கொண்டிருப்பதை அறிந்த அருண்குமார் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் மறுவாழ்வு பெற சென்றார். அங்கு தன்னைப் போன்று தண்டுவட பாதிப்பால் மறுவாழ்வு பெற வந்திருப்பவர்களை கண்டும் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் அவர்களும் தண்டுவட பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் என்பதை அறிந்து கொண்டார் அருண்குமார். பின்  தன்னை போன்ற தண்டுவட பாதிப்பு உள்ளானவர்களுக்கு அவரால் உருவாக்கப்பட்ட இந்த அமர் சேவா சங்கத்தின் மூலம் மறுவாழ்வு அளிக்கும் மிகப்பெரிய பணியையும் சேவையையும் , செய்வதைக் கண்டு தன்னுடைய தன்னம்பிக்கையாக முன்மாதிரியாக பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் அவர்களை எடுத்துக்கொண்டு சில மாதங்கள் அமர்சேவா சங்கத்தில் மறுவாழ்வு பயிற்சிகளைப் பெற்று பின்னர் வீடு திரும்பினார்  அருண்குமார்,  தான் கற்ற கல்வியை பயனுள்ளதாக்க வேண்டும் என  நினைத்து வீட்டில் இருந்தபடியே கணினியின் உதவியுடன் ரயில் டிக்கெட் முன்பதிவு, பிற இணைய பதிவுகள், இணையம் சார்ந்த வேலைகள் அனைத்தையும் கீழாம்பூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக செய்ய தொடங்கினார், அதற்கு அவர்கள் தரும் சிறு தொகையை பெற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார்.  நாளடைவில் ஜாப் டைப்பிங், ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் ஆன்லைன் ஒர்க்ஸ், போன்ற பணிகளை செய்யத் தொடங்கினார், மேலும் தட்டச்சு பயிற்றுநராக இருந்து கிட்டத்தட்ட 300க்கும் மாணவ மாணவிகளை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற செய்து அந்த தகுதியினால் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் சில மாணவர்கள் வெற்றி பெறவும் காரணமாக இருந்திருக்கிறார் அருண்குமார். 



அருண்குமார் என்றாலே கீழாம்பூர் பகுதி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு, “டேய் உன்ன அருண் அண்ணனிடம் சொல்லிக்கொடுக்கிறேன் பாரு" என அப்பகுதி பள்ளி மாணவர்களுக்கிடையே யான உரையாடல்களில் அதிகம் கேட்க முடிந்தது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிய முயன்ற போது தான் தெரிந்து கொண்டோம், அருண்குமார் கீழாம்பூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கும் பணியையும் செய்து வருகிறார் என்று. டியூஷன் கட்டணம் தர இயலாத ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கும் பணியையும் செய்து வருகிறார். மேலும் தனது உடல்நிலை காரணமாக முழு நேரம் டியூசனில் உள்ள அனைத்து மாணவர்களை கவனித்துக் கொள்ள இயலாத காரணத்தினால் அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளையும் டியூசன் பணியில் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு ஊதியமாக அவர்களின் கல்வித்தேவைக்காக தன்னால் இயன்ற தொகையை கொடுத்து வருகிறார். 



 முதுகு தண்டுவட பாதிப்பிற்கு பின் தன்னுடைய மறுவாழ்வு நகர்ந்து கொண்டிருந்தாலும்,  இப்படியே ஒரு இடத்தில் தங்கி விடக் கூடாது, அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று தன்னுடைய தேடல் சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தன்னுடைய கல்வி சார்ந்த பணிகள் அதனால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் என இந்த தேடலுடனும்  கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த வழிகாட்டியாய் திகழ்ந்து வருகிறார்.  தன்னுடைய வாழ்வும் சக்கர நாற்காலியின் நகர்வு போல நகர்ந்து  கொண்டே இருக்க  வேண்டும் எனவும் கூறுகிறார். இதுவே போதும் என்ற எண்ணம் ஒரு போதும் தன் மனதில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் அருண்குமார். ராணுவத்தில் சேர முடியாமல் போனாலும் தன்னுடைய ஆசையான எல்எல்பி படிப்பை நோக்கி தன்னுடைய அடுத்தகட்ட நகர்வை வைத்துள்ளார் அருண்குமார். தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊரார்கள் உதவி இல்லையேல் எல்எல்பி படிப்பை நோக்கி நான் நகர்ந்து இருக்க முடியாது, 2004இல் ஏற்பட்ட விபத்து தன்னுடைய வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டு என்னை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தாலும், அதே சக்கர நாற்காலி உதவியுடன் மீண்டும் எனது வாழ்க்கையை நான் புரட்டிப்போட துணிந்து விட்டேன், எனக்கு தண்டுவடம் தான் பாதித்தது என்னுடைய தன்னம்பிக்கை பாதிக்கவில்லை, என்னுடைய சக்கர நாற்காலியையே  எனக்கான சிம்மாசனமாக மாற்றி நான் அமர தொடங்கிவிட்டேன் என்றார் அவர், மேலும்  இந்த தலைமுறையினருக்கு கல்வி குறித்த  விழிப்புணர்வை மட்டும் தரமானதாக கொடுத்துக் கொண்டே இருந்தால் என்னைப் போன்று தண்டுவட பாதிப்பு சூழ்நிலை மட்டுமல்ல எந்த சிக்கலான சூழ்நிலைகளையும் தகர்த்து தன்னம்பிக்கையுடன் அவர்கள் வெளியில் வர  அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்கிறார் அருண்குமார்.


தற்போது இப்பகுதியில் இருக்கும் சக நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் வழங்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் என்னால் எனது பொருளாதாரம் எழுந்து நிற்கும் நிலையில் நான் மிகப்பெரிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை உருவாக்கி வரும் இளம் தலைமுறையினரை வழிநடத்தும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறேன் எனவும் புன்னகை முகத்துடன் கூறுகிறார் இவர்,




மனித வாழ்வில் யாருக்கு என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்,  ஆனால் நம் மன ஓட்டங்களை அதற்கு ஏற்ப வலுப்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கையோடு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தண்டுவடம் பாதிக்கப்பட்ட இந்த மாற்றுத்திறனாளி அருண்குமாரின் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. "சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று மாற்றத்திற்கான திறன் படைத்த இளைஞரின் தன்னம்பிக்கை முயற்சி அனைவராலும் பாராட்டக்கூடிய ஒன்றே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை"