திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வடக்கு கழுவூர், மாங்குளம் பாப்பாங்குளம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அமைந்திருக்கின்றன, இந்த பகுதியில் மணிமுத்தாறில் இருந்து சாத்தான்குளம் வரை செல்லும் மணிமுத்தாறு கால்வாய் செல்கின்றது,  இதன் மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன,  இந்தக் கால்வாயை கடந்து வடக்கு கழூவூர் கிராமத்திற்கு செல்வதற்காக  தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, மழை காலங்களில் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்லும், அந்த பகுதி மக்கள் இந்த பாலத்தை மட்டுமே கடந்து தான் வெளியே வர முடியும், இல்லையெனில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும், மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும், தண்ணீரில் மூழ்கடித்து செல்லும் போதெல்லாம் அவர்கள் பள்ளிக்குச் செல்லாமலும் பொதுமக்கள் வெளியே செல்லாமலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை இருக்கும் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது, 




இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தற்போது இந்த கால்வாயில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு  தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது, இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வடக்கு கழுவூர், மாங்குளம், பாப்பாங்குளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில்  போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி கிராம மக்கள் இந்த தரைப் பாலத்தை பயன்படுத்தி திருநெல்வேலி நகருக்கு வரும் அதேவேளையில் மருத்துவமனை, கல்வி நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வருவதற்கும் இந்த தரைப்பாலம் ஒன்றே பிரதான பாதையாக இருந்தது, ஆனால் தற்போது நீடித்து வரும் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 10 நாட்களுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.




இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுடலைக்கண்ணு கூறும் பொழுது, இந்த பாலம் தொடர்பாக பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் பல முறை மன்றாடி உள்ளோம், மனுவும் அளித்து உள்ளோம், இந்த பாலத்தால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை, குறிப்பாக பேருந்து வசதி கூட இல்லை, மழை நின்றதும் நடவடிக்கை இல்லையெனில் ஊர் மக்களை திரட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்யும் முடிவில் உள்ளோம் என வருத்தம் தெரிவித்தார். 




அப்பகுதி மாரியம்மாள் கூறும் பொழுது, உடம்பு சரியில்லை என ஆட்டோவை அழைத்தாலும் பாலம் ரோடு சரியில்லை என வர மறுக்கின்றனர், ஊருக்குள் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ யாரும் முன்வருவதில்லை, ஓட்டு கேட்கும் போதே எங்களது பிரச்சினையை சரி செய்து தருவோம் என கூறுகின்றனர், ஆனால் பின்னர் எங்கள் பகுதியை கண்டுகொள்வதேயில்லை என தெரிவித்தார்.




 
மேலும் விவசாய நிலங்களுக்கு செல்லவோ, பொருட்களை எடுத்து செல்லவோ பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும், விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டது, இதனால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறோம், அரசு தான் உதவ வேண்டும் என கூறுகிறார் அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன்.




குறிப்பாக இந்த தரைப்பாலம் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக சேதம் அடைந்து உள்ளது. எனவே அரசு நிரந்தர தீர்வாக மேல்மட்ட பாலம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆட்சிகள் மாறினாலும் தங்களின் காட்சிகள் மாறவில்லை, இந்த ஆட்சியிலாவது விடிவுகாலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் இக்கிராம மக்கள்.