நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிப்பறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஐந்து மாணவர்கள் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தின்போது சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் காயமுற்ற மாணவர்கள் குறித்த விபரங்களை கண்டறிந்து பெற்றோர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிப்பதில் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டார்.
ஏனென்றால் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே இந்த சம்பவத்தையும் பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்கும் வகையிலும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 110 பள்ளிகளை சேர்ந்த உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 110 பள்ளிகளிலிருந்தும் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் போக்குவரத்து பிரிவு பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நேற்று சாப்டர் பள்ளி விபத்தில்தான் பெற்ற அனுபவமும், அடையாள அட்டை மாணவர்களுக்கு இல்லாததால் பெற்றோர்களிடம் ஏற்பட்ட பதற்றத்தை குறைக்க முடியாமல் திணறிய சூழலையும் வந்திருந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார். எனவே கண்டிப்பாக பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தலைமை ஆசிரியர்கள் அடையாள அட்டை உடனடியாக வழங்கிவிடவேண்டும்.
பள்ளிகளுக்கு அருகே இருக்கும் காவல் நிலையத்துடன் தலைமையாசிரியர்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பள்ளியோடு முடித்து விடாமல் காவல் நிலையத்தின் துணை கொண்டு அந்த பிரச்சினைகளை அணுக வேண்டும். இது அந்த பிரச்சினை பெரிதாகாமல் சுமுகமான ஒரு தீர்வு ஏற்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உதவும் என தெரிவித்தார்.
மேலும் பேருந்து பயணங்களின்போது படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் கூடுதல் ஒத்துழைப்பு தந்து பள்ளிகள் விடும் நேரத்தில் அதிகமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பள்ளி அருகே செயல்படும் கடைகளிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா குட்கா போன்ற பொருட்கள் மாணவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த புகார் வந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதுவரை நெல்லை மாநகர பகுதியில் 7.5 டன் வரை கஞ்சா பறிமுதல் செய்து இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த ஒரு தலைமையாசிரியரிடம் இருந்தும் இது குறித்த புகார் எதுவும் வரவில்லை. எனவே இனிமேல் தலைமையாசிரியர்கள் போதைப் பொருட்கள் குறித்த புகார் வந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.